கடலூர் பாடலீஸ்வரர் கோவில் தேரோட்டம்

வைகாசி பெருவிழாவையொட்டி கடலூர் பாடலீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

Update: 2022-06-13 16:33 GMT

கடலூர், 

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பழமையும், பெருமையும் வாய்ந்த பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி பெருவிழா 13 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விழா கடந்த 5-ந் தேதி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வைகாசி பெருவிழாவின் 9-ம் நாளான நேற்று காலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணி அளவில் பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் பஞ்சமூர்த்திகளுக்கு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் கோவிலை வலம் வந்து, வெளிமண்டபத்துக்கு வந்தனர்.

தேரோட்டம்

இதையடுத்து மேளதாளங்கள், கைலாய வாத்தியங்கள் முழங்க, பஞ்சமூர்த்திகள் தேரை வந்தடைந்தனர். பின்னர் தேரின் சக்கரங்களுக்கு பூஜைகள் நடந்தது. அதனை தொடர்ந்து காலை 7 மணி அளவில் தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் வடம் பிடித்து இழுத்தும், கொடி அசைத்தும் தொடங்கி வைத்தனர். இதில் ஸ்ரீவள்ளி விலாஸ் உரிமையாளர் பாலு செட்டியார் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பாடலீஸ்வரா... பரமேஸ்வரா... என்று பக்தர்களின் பக்தி கோஷத்துடன் திருத்தேர் வலம் வந்தது. அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் பிரியாவிடையுடன் பாடலீஸ்வரரும், சிறிய தேரில் அம்மனும், மற்றொரு தேரில் முருகப்பெருமானும் ராஜவீதிகளில் வலம் வந்தனர்.

பக்தர்களுக்கு அன்னதானம்

தேரடி தெருவில் இருந்து புறப்பட்ட திருத்தேரானது சுப்புராய செட்டித்தெரு, சங்கர நாயுடு தெரு, சஞ்சீவிநாயுடு தெரு, போடி செட்டித்தெரு வழியாக மதியம் 12 மணி அளவில் நிலையை வந்தடைந்தது. திருத்தேர் வலம் வந்த ராஜவீதிகளில் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்பினர் நீர், மோர் மற்றும் அன்னதானம் வழங்கினர். தேரோட்டம் நடந்த போது கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.

மேலும் போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் மேற்பார்வையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 10-ம் நாள் திருவிழாவான இன்று(செவ்வாய்க்கிழமை) காலை 9 மணிக்கு நடராஜர் தரிசனம் மற்றும் திருக்கல்யாணம், இரவில் பஞ்சமூர்த்திகள் முத்துபல்லக்கில் வீதி உலா நடக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்