கடலூர்: எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை குடோனுக்கு மீண்டும் தீ வைப்பு...!

கடலூரில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை குடோனுக்கு மர்ம நபர்கள் மீண்டும் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-06-24 04:00 GMT

சிதம்பரம்,

கடலூர் அடுத்த புதுச்சத்திரம் அருகே பெரியகுப்பம் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தனியாருக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது. 2500 ஏக்கர் பரப்பளவில் ஆலை அமைக்கும் பணி தொடங்கி, சுமார் 75 சதவீத பணிகள் நடைபெற்றபோது, கடந்த 2011-ம் ஆண்டு தானே புயலால் ஆலை அமைக்கும் பணி கடும் பாதிப்புக்குள்ளானது.

இதன் காரணமாக ஆலை அமைக்கும் பணி பாதியிலேயே கைவிடப்பட்டது. இருப்பினும் ஆலை மற்றும் அதன் வளாகத்தில் உள்ள குடோன்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான இரும்பு, தாமிரம் உள்ளிட்ட பல்வேறு தளவாட பொருட்கள் வைக்கப்பட்டு, காவலாளிகள் மூலம் பாதுகாக்கப்பட்டு வந்தது.

கடந்த சில மாதங்களாக மர்மநபர்கள் கும்பல் கும்பலாக நள்ளிரவில் ஆலைக்குள் புகுந்து தளவாட பொருட்களை கொள்ளையடித்துச் சென்று வந்தனர். குறிப்பாக கடந்த மே மாதம் 10-ந்தேதி ஆலைக்குள் புகுந்த 50-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்த பொருட்களை கொள்ளையடிக்க முயன்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மர்மநபர்களை சுற்றி வளைத்தனர். அப்போது அந்த மர்ம நபர்கள் தாங்கள் கொண்டு வந்த பெட்ரோல் குண்டுகளை போலீசார் மீது வீசிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் கடந்த 20-ம் தேதி நள்ளிரவு ஆலை வளாகத்துக்குள் புகுந்த மர்மநபர்கள் தளவாட பொருட்கள் வைத்திருந்த குடோனுக்கு தீவைத்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த காவலாளி இதுபற்றி பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கும், புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

அதற்குள் அங்கு வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடோனுக்கு தீவைத்த மர்மநபர்கள் யார் என விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் உள்ள மேலும் ஒரு குடோனுக்கு மர்ம நபர்கள் இன்று தீ வைத்து உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீணை அணைக்கு முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ள குடோனுக்கு மர்ம நபர்கள் மீண்டும் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்