கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால், தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைகளில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த 27.11.2022 அன்று நடந்தது. தொடர்ந்து உடற்தகுதி தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி முதல் 10-ந்தேதி வரை நடந்தது. இந்த தகுதி தேர்வில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கைரேகை சோதனை நேற்று கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. இதில் 39 பெண்கள் உள்பட 158 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது போலியான சான்றிதழ் யாரேனும் வைத்துள்ளார்களா? என்று சரிபார்க்கப்பட்டது. கைரேகை பரிசோதனையும் மேற் கொள்ளப்பட்டது. இந்த கைரேகை மூலம் ஏற்கனவே தேர்வர்கள் மீது வழக்குகள் ஏதேனும் உள்ளதா? என்பதை கண்டறிய முடியும். இந்த சோதனை முடிந்ததும் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.