கடலூர் மத்திய சிறையில் இருக்கும் சவுக்கு சங்கருக்கு பணிநீக்க விளக்க நோட்டீஸ் வாங்க மறுத்ததால் அறை வாசலில் ஒட்டப்பட்டது

கடலூர் மத்திய சிறையில் இருக்கும் சவுக்கு சங்கருக்கு பணிநீக்க விளக்க நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அவர் அதை வாங்க மறுத்ததால் அறை வாசலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

Update: 2022-09-24 18:45 GMT

கடலூர் முதுநகர், 

நீதித்துறை குறித்து 'யூடியூப்' சமூக வலைத்தளத்தில் சவுக்கு சங்கர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதையடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதில் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சவுக்கு சங்கர், தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு ஊழல் தடுப்பு துறையில் அலுவலராக பணியாற்றி வந்தார். 2008-ம் ஆண்டு அரசு ஆவணங்களை கசியவிட்ட புகாரில் சிக்கி பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

தொடர்ந்து பணியிடை நீக்கத்திலேயே இருந்து வந்த அவருக்கு பிழைப்பூதியமாக மாதம் ரூ.43 ஆயிரம் வீதம் என 14 ஆண்டுகளில் ரூ.65 லட்சம் வரை வழங்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையின்போது சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை இதனை கண்டித்திருந்தது.

அறை வாசலில் ஒட்டப்பட்டது

இந்த நிலையில் சவுக்கு சங்கர் அரசு பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான விளக்க நோட்டீசை வழங்குவதற்காக நேற்று கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மத்திய சிறைக்கு சென்றனர். அப்போது சிறை அதிகாரிகள் மூலம் அவருக்கு பணிநீக்க விளக்க நோட்டீசை வழங்கியபோது அவர் அதனை வாங்க மறுத்துவிட்டார். அதனை தொடர்ந்து அந்த விளக்க நோட்டீசை சிறையில் இருக்கும் அறை வாசலில் ஒட்டிவிட்டு அதிகாரிகள் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்