கடலூர்: கோவில் திருவிழாவிற்கு வந்த 2 சிறுமிகள் ஏரியில் மூழ்கி பலி...!

பெண்ணாடம் அருகே கோவில் திருவிழாவிற்கு வந்த 2 சிறுமிகள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-07-03 10:36 GMT

பெண்ணாடம்,

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த பெ.பூவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது37). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி(15), சிவசக்தி(13), சிவரஞ்சனி(10), பரமேஸ்வரி(8), காவியா(5) என ஐந்து பெண் குழந்தைகளும் 4, வயதில் சிவபெருமாள் என ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

பெருமாளின் மனைவி கன்னியாகுமரி தனது மூத்த மகள் முத்துலட்சுமி, 2-வது மகள் சிவசக்தி ஆகியோருடன் தனது தாய்வீடான திருமலை அகரத்தில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் கலந்து கொள்ள சென்று உள்ளனர்.

மஞ்சள் நீராட்டு

திருவிழாவை முன்னிட்டு நேற்று மஞ்சள் நீராட்டு விளையாட்டு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு விளையாடிய முத்துலட்சுமி மற்றும் சிவசக்தி இருவரும் வீட்டுக்கு இரவு முழுவம் வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் கன்னியாகுமரி மற்றும் உறவினர்கள் அப்பகுதி முழுவதும் தேடி பார்த்தனர். ஆனால் சிறுமிகள் இருவரும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இன்று காலை திருமலை அகரத்தில் உள்ள பெரிய ஏரியில் இரண்டு சிறுமிகள் உயிரிழந்து கிடப்பதாக அப்பகுதி மக்களிடையே தகவல் பரவியது.

போலீசார் விசாரணை

சம்பவ இடத்துக்கு வந்த பெண்ணாடம் போலீசார் குளத்திற்குள் இறங்கி இரண்டு சிறுமிகளின் உடலையும் மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது திருவிழாவில் காணாமல் போன பெருமாள்-கன்னியாகுமரி தம்பதியின் மகள்கள் முத்துலட்சுமி, சிவசக்தி என்பது தெரியவந்தது.

இதையடுத்து பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்த போலீசார் சிறுமிகளின் உடலை பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில் திருவிழாவிற்கு வந்த சிறுமிகள் ஏரியில் மூழ்கி இறந்து சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்