உருக்குலைந்து கிடக்கும் சோழர்கால படிக்கட்டுகள்

விருத்தாசலம் மணிமுக்தாற்றங்கரையில் உருக்குலைந்து கிடக்கும் சோழர்கால படிக்கட்டுகள் விரைந்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Update: 2023-05-01 18:45 GMT

விருத்தாசலம் 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உற்பத்தியாகிறது மணிமுக்தாறு. இந்த ஆறு, கடலூர் மாவட்டம் விருத்தாசலத்துக்குள் நுழைந்து விருத்தகிரீஸ்வரரை தரிசனம் செய்தபடி கூடலையாத்தூர் அருகே வெள்ளாற்றுடன் ஒன்றாக கலந்து பரங்கிப்பேட்டை அருகே கடலில் சங்கமிக்கிறது.

அழகு சேர்க்கும் மணிமுக்தாறு

விருத்தாசலம் நகரை இரண்டாக பிரித்துக்கொண்டு பாய்ந்தோடும் மணிமுக்தாறு நகருக்கு அழகு சேர்ப்பதோடு, அது செல்லும் திசையெங்கும் செழுமையாக்கி செல்கிறது. இந்த நதி பல்வேறு சிவ புராணங்களில் இடம் பெற்றுள்ளதை வைத்து பார்க்கும் போது, மிகவும் பழமை வாய்ந்த நதி என தெரியவருகிறது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் தீர்த்தமாகவும் இந்த ஆறு அமைந்துள்ளது.

இவ்வாறு பல்வேறு புகழை தன்னகத்தே கொண்டுள்ள இந்த ஆறு, தற்போது கூவமாக மாறி வருகிறது. நகரின் இருபக்கங்களில் இருந்தும் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர், சாக்கடை நீர் அனைத்தும் மணிமுக்தாற்றில் தான் கலந்து வருகிறது. இறைச்சி கடை கழிவுகள், ஓட்டல் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் என அனைத்தும் கொட்டப்படும் குப்பை கிடங்காகவும் காணப்படுகிறது.

மணிமுக்தாற்றை சுத்தப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும், இதுவரை சுத்தப்படுத்த முடியவில்லை என்பதுதான் வேதனையான விஷயம். காசியை விட வீசம் அதிகம் என புகழப்படும் மணிமுக்தாற்றில் கழிவுநீர் கலந்து அசுத்தமான ஆறாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சோழர் கால...

விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக உற்சவம் மற்றும் கொளஞ்சியப்பர் கோவில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறும். மேலும் மாசி மகத்தன்று லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுப்பார்கள். மாதந்தோறும் வரக்கூடிய அமாவாசை, மஹாளய அமாவாசை, ஆடி அமாவாசை, தை அமாவாசை உள்ளிட்ட காலங்களிலும் ஏராளமான மக்கள் திரண்டு வந்து தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுப்பார்கள்.

இதனால் விநாயகர் கோவில் பகுதி ஆற்றங்கரையில், ஆற்றில் நீராடும் வகையில் சோழர் காலத்தில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த படிக்கட்டுகளின் வழியாக இறங்கி தான் மக்கள் ஆற்றில் நீராடுவதும், திதி கொடுப்பதையும் வழக்கமாக கொண்டிருந்தனர். இந்த படிக்கட்டுகள் முழுவதும் தற்போது பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்து விட்டது. எப்போது வேண்டுமானாலும் ஆற்றில் சரிந்து விழும் நிலையில் உள்ள படிக்கட்டுகளை பார்ப்பதற்கே படுபயங்கரமாக உள்ளது.

சரி செய்வதில் போட்டி

அவ்வாறு படிக்கட்டுகள் சரிந்து விழுந்தால் மழைக்காலங்களில் கரைகள் உடைந்து ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம், நகருக்குள் புகுந்து பெரும் சேதத்தை உண்டாக்கிவிடும். இதை அவ்வப்போது ஆய்வு என்ற பெயரில் வந்து மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும் பார்வையிட்டு செல்கிறார்களே தவிர, அதை சீரமைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விருத்தாசலம் பொதுப்பணித்துறையும், நகராட்சி நிர்வாகமும் ஆற்றங்கரை விநாயகர் கோவில் பகுதியில் உள்ள படித்துறையை யார் சரி செய்வது? என ஒருவர் மீது ஒருவர் பழியை போட்டுக்கொண்டு கிடப்பில் போட்டுள்ளனர்.

இதனால் அமாவாசை தினங்களில் தர்ப்பணம் கொடுக்கும் விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் ஆற்றில் கழிவுநீர் தேங்கி இருப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்களும் ஆற்றில் நீராட முடியாமல் தவிக்கின்றனர். அதனால் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் உள்ள படித்துறையை சரி செய்யும் பணியை உடனடியாக தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சமூக வலைதளங்களில் வைரல்

இந்நிலையில் இந்த படிக்கட்டுகள் சம்பந்தமாக சமூக வலைதளங்களில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில் நூறு தலைமுறைகளாக உங்களுக்கும் உங்கள் முன்னோர்களுக்கும் படிக்கட்டாய், வெள்ள தடுப்பு சுவராய் இருந்தேன். ஆனால் நாளைய தலைமுறைக்கு நான் இருப்பது சந்தேகமே, என்னைக் காப்பாற்றுங்கள். சோழ மன்னர்களால் கட்டமைக்கப்பட்டேன். உங்கள் தலைமுறையில் கட்டவிழ்த்து விட்டு விடுவீர்களோ! என்னை காப்பாற்றுங்கள். வெள்ள தடுப்பு சுவராய் உங்களை நான் காப்பாற்றுகிறேன். இப்படிக்கு விருத்தகிரீஸ்வரர் கோவில் படித்துறை, திருமுதுகுன்றம். என அந்த பதிவில் விருத்தாசலம் மணிமுக்தாற்றின் படிக்கட்டுகள் உயிர் போகும் தருவாயில் என்னை காப்பாற்றுங்கள் எனக் கூறுவது போல் பதிவிடப்பட்டிருந்தது. இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

நீராட முடியாமல் தவிப்பு

வக்கீல் விஜயகுமார்:- விருத்தாசலம் பொதுப்பணி துறையினரும், நகராட்சி நிர்வாகமும் ஆற்றங்கரை விநாயகர் கோவில் பகுதியில் உள்ள படித்துறையை யார் சரி செய்வது என ஒருவர் மீது ஒருவர் பழியை போட்டுக்கொண்டு கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் மணிமுக்தாற்றுக்கு வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திதி கொடுக்க வருகின்றனர். அவர்களாலும் படித்துறையில் இறங்கி ஏற முடியாமல் அல்லல்படுகின்றனர். சிலர் வேறு வழியின்றி விநாயகர் கோவிலுக்கு செல்லும் வழியிலேயே அமர்ந்து திதி கொடுத்து விட்டு செல்கின்றனர். ஆற்றில் கழிவுநீர் தேங்கி இருப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்களும், ஆற்றில் நீராட முடியாமல் தவிக்கின்றனர். எனவே நகராட்சி நிர்வாகமும், பொதுப்பணித்துறையும் போட்டி போடாமல் மணிமுக்தாற்றில் உள்ள படித்துறையை சரி செய்யும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும்.

உருக்குலைந்த படிக்கட்டுகள்

விருத்தாசலம் லட்சுமி:- முற்காலத்தில் விருத்தாசலம் நகர மக்களுக்கு முக்கிய பொழுது போக்கு தலமாக இருந்தது மணிமுக்தாற்றின் கரை தான். விடுமுறை தினங்களிலும், மாலை வேளையிலும் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் ஆற்றின் கரையின் உள்ள படிக்கட்டுகளில் அமர்ந்து பேசி உரையாடுவதுடன், இயற்கையை ரசித்து பொழுதை கழித்தனர். ஆனால் காலப்போக்கில் எவ்வித பராமரிப்பும் இன்றி முற்றிலும் படிக்கட்டுகள் உருக்குலைந்து கிடப்பதால், அதனை பார்க்க கூட முடியவில்லை. அந்த அளவிற்கு பரிதாபகரமான நிலையில் உள்ளது. மேலும் ஆற்று பிள்ளையார் கோவிலில் படிக்கட்டுகள் அசுத்தமாகவும், படிக்கட்டுகள் சரியில்லாத காரணத்தாலும் மணிமுக்தாற்றின் கரையில் திதி கொடுக்க சிரமமாக உள்ளது. படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் போது கொஞ்சம் தடுமாறினாலும் கீழே விழும் நிலை உள்ளது. அது மட்டும் இன்றி விருத்தாசலத்தை சுற்றியுள்ள அனைத்து கோவில்களில் நடக்கும் பால்குடம், செடல் போன்ற திருவிழாக்கள் ஆரம்பிப்பது, இந்த ஆற்று பிள்ளையார் நதிக்கரையில் இருந்து தான். அப்படிப்பட்ட படிக்கட்டுகளை சரி செய்ய இந்து அறநிலையத்துறையும், தன்னார்வலர்களும், பொதுமக்களும் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags:    

மேலும் செய்திகள்