நல்லெண்ணெய் விலை குறைய வாய்ப்பு

சமையல் எண்ணெய்களில் நல்லெண்ணெய் விலை சமீபகாலமாக விலை உயர்ந்து வரும் நிலையில் அடுத்து வரும் நாட்களில் விலை குறைய வாய்ப்புள்ளதாக வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

Update: 2023-02-01 19:13 GMT


சமையல் எண்ணெய்களில் நல்லெண்ணெய் விலை சமீபகாலமாக விலை உயர்ந்து வரும் நிலையில் அடுத்து வரும் நாட்களில் விலை குறைய வாய்ப்புள்ளதாக வணிக வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

இரு மடங்கு விலை உயர்வு

இதுகுறித்து மேலும் அவர்கள் கூறியதாவது:-

சமையல் எண்ணெய்களில் நல்லெண்ணெய் தென் மாநிலங்களில் பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2003-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நல்லெண்ணெய் கிலோ விலை ரூ. 70 ஆக இருந்த நிலையில் 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் நல்லெண்ணெய் விலை இரண்டு மடங்காக உயர்ந்து கிலோ ரூ.140-க்கு விற்பனையானது.

அப்போது சூரியகாந்தி எண்ணெய் கிலோ ரூ.65 ஆகவும், பாமாயில் ரூ.40-க்கும் விற்பனையானது. இதனைத்தொடர்ந்து 2018-ம் ஆண்டு எள் விலை உயர்ந்த நிலையில் நல்லெண்ணெய் விலை கிலோ ரூ.300 ஆக உயர்ந்தது. அப்போது சூரியகாந்தி எண்ணெய் கிலோ ரூ.89 ஆகவும், பாமாயில் ரூ. 75 ஆகவும் விற்பனையானது.

கடலை எண்ணெய்

தற்போது நல்லெண்ணெய் கிலோ ரூ.390 ஆக விற்பனையாகிறது. சூரியகாந்தி எண்ணெய் கிலோ ரூ.150-க்கும், பாமாயில் கிலோ ரூ.96-க்கும் விற்பனை ஆகிறது.

ஆனால் பிற சமையல் எண்ணெய்களை ஒப்பிடும்போது நல்லெண்ணையை விட அவற்றின் விலை குறைவாகவே உள்ளது. கடலை எண்ணெய்யின் விலை கிலோ ரூ.200 ஆகவும் உள்ளது. ஆனாலும் நல்லெண்ணெய்யின் விற்பனை குறையவில்லை. நல்லெண்ணெய்யை பொறுத்தமட்டில் தமிழகத்தில் 80 சதவீதமும், இதர மாநிலங்களில் 10 சதவீதமும், வெளிநாடுகளில் 10 சதவீதமும் விற்பனை ஆகிறது.

குறைய வாய்ப்பு

இந்நிலையில் 75 கிலோ எள் மூடை ரூ.8 ஆயிரமாக இருந்த நிலையில் தற்போது ரூ.11 ஆயிரமாக விலை உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் எள் சாகுபடி குறைவாக உள்ளதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் அடுத்து வரும் நாட்களில் எள் சாகுபடி அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில் நல்லெண்ணெய்யின் விலை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு வணிக வட்டாரத்தினர் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்