கோவையில் சி.ஆர்.பி.எப்.வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
கோவையில் சி.ஆர்.பி.எப்.வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
துடியலூர்
கோவையில் சி.ஆர்.பி.எப்.வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவை எடுத்துள்ளார்.
சி.ஆர்.பி.எப்.படை வீரர்
கோவை அருகே துடியலூர் தொப்பம்பட்டியை அடுத்த குருடம்பாளையத்தில் மத்திய ரிசர்வ் ேபாலீஸ் படை (சி.ஆர்.பி.எப்) பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு சி.ஆர்.பி.எப்.படை வீரராக பணிபுரிந்து வந்தவர் ஜெகன் (வயது 32).
இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பெருமாள்குளம் ஆகும். இவர் கடந்த 2011-ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த இவர், கடந்த மார்ச் மாதம் கோவையில் உள்ள பயிற்சி கல்லூரியில் பணியமர்த்தப்பட்டார்.
துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
இந்த நிலையில் இவர், நேற்று மதியம் 1.30 மணியளவில் பணியில் இருந்தார். அப்போது திடீரென பாதுகாப்புக்கு வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டார். இதில் 2 தோட்டாக்கள் அவரது கழுத்தில் பாய்ந்து வெளியேறியது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைப்பார்த்த சக வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
குடும்ப பிரச்சினை
இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு முதல் மனைவியை விவாகரத்து செய்தார். இதனை தொடர்ந்து இவர் 2-வது திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
முன்னதாக அவர் தற்கொலை செய்யும் முன்பு, தனது பெற்றோர் மற்றும் மூத்த அண்ணனுக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் அனுப்பி உள்ளார். அதில் குடும்பத்தை பார்த்து கொள்ளுமாறும், தற்கொலை செய்து கொள்வதற்கு மன்னியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.இதுகுறித்து அதிகாரிகள் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.