தூத்துக்குடி கடற்கரையில் 2-வது நாளாக மக்கள் கூட்டம் அலைமோதியது
பொங்கல்பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி கடற்கரையில் 2-வது நாளாக மக்கள் கூட்டம் அலைமோதியது
தூத்துக்குடியில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு நேற்று 2-வது நாளாக கடற்கரை பூங்காக்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
விடுமுறை
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 15-ந் தேதி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. அதற்கு அடுத்த நாள் 16-ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதனால் மக்கள் கடற்கரைகளில் குவிந்தனர். மேலும் நேற்றும் விடுமுறை தினம் என்பதால் மக்கள் சுற்றுலா மையங்களில் குடும்பத்தோடு கூடி மகிழ்ந்தனர்.
மக்கள் கூட்டம்
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் நேற்று மாலை மக்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான மக்கள் குடும்பத்தோடு கடற்கரையில் குவிந்து பொங்கல் விடுமுறையை மகிழ்வோடு கொண்டாடினர். பொதுமக்கள் வசதிக்காக முத்துநகர் கடற்கரையில் படகு சவாரி இயக்கப்பட்டது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக பயணித்து மகிழ்ந்தனர். இதேபோன்று தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரை, ரோச் பூங்கா கடற்கரை போன்ற கடற்கரை பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும், தூத்துக்குடி நகரில் உள்ள ராஜாஜி பூங்கா, நேரு பூங்கா, சங்கரநாராயணன் பூங்கா போன்ற பூங்காக்களிலும் நேற்று 2-வது நாளாக மக்கள் குடும்பத்தோடு கூடி பொங்கல் விடுமுறையை உற்சாகமாக கழித்தனர். இதனால் அனைத்து இடங்களிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.