பொருட்கள் வாங்க மாசி வீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்க நேற்று மாசி வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2022-10-08 20:27 GMT

தீபாவளி பண்டிகையையொட்டி பொருட்கள் வாங்க நேற்று மாசி வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ளது. தீபாவளி பண்டிகைக்காக பொருட்கள் மற்றும் ஆடைகள் வாங்குவதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள், மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி உள்ள பகுதிகள், மாசி வீதிகள், வெளி வீதிகளில் கூட்டம், கூட்டமாக வந்து செல்கின்றனர்.

நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாவே இருந்தது. இதனால், நேதாஜி ரோடு, டவுன்ஹால் ரோடு போன்ற சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாத மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் பல்வேறு இடங்களில் இருந்து நகர் பகுதிக்கு பஸ், கார், மோட்டார் சைக்கிள் என பல வாகனங்களில் வந்தனர். அவர்கள் அனைவரும் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து நடந்து சென்று நேதாஜி ரோடு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் துணிமணிகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

புது, புது கடைகள்

பண்டிகை நெருங்கிவிட்டதால், இந்த விடுமுறை நாட்களை விட்டு விட்டால் பொருட்கள் வாங்க முடியாது என்ற நோக்கத்தில் ஏராளமான மக்கள் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் வலம் வருகின்றனர். இவர்களின் ஆசைகளை நிறைவேற்றும் விதமாக பல்வேறு புதுப்புது கடைகளும், மழைக்கு முளைத்த காளான் போல் முளைத்து கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் ஆர்வத்துடன் தங்களுக்கான பொருட்களை வாங்கி சென்ற காட்சிகளை காணமுடிந்தது.

ஏற்பாடுகள் என்ன?

மதுரை மாநகரில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசார் கூறுகையில், "மதுரை மாநகரில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான மாசி வீதிகள், வெளி வீதிகள், அனைத்து பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

குறிப்பாக மாசி வீதிகளில் கண்காணிப்பு கேமராக்களுடன் கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதில் பணிபுரியும் காவலர்கள் தொலைநோக்கிகள் மூலம் மக்கள் கூட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் பறக்கும் கேமராக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் குற்றம் புரிவோரின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காக சீருடை அணியாத காவலர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்வதை கண்காணித்து தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் அதிக அளவில் வர வாய்ப்புள்ளது. அதற்கு தகுந்தார்போல், கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். வரும் நாட்களிலும் கூடுதல் கண்காணிப்பு செய்யப்படும்" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்