கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், கோவை கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பாதுகாப்பு தடுப்புகள் அமைக்காததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

Update: 2022-10-09 18:45 GMT

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், கோவை கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பாதுகாப்பு தடுப்புகள் அமைக்காததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

தீபாவளி பண்டிகை

நாடு முழுவதும் வருகிற 24-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். இதையொட்டி முன்கூட்டியே புத்தாடைகள் வாங்குவதற்காக கோவை பெரியகடை வீதி, ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு உள்ளிட்ட இடங்களில் நேற்று நூற்றுக்கணக்கில் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் கடைவீதிகளில் கூட்டம் அலை மோதியது.

பெரும்பாலான பொதுமக்கள் தங்களது சொந்த வாகனங்களில் வந்ததால் ஒப்பணக்கார வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போதிய வாகன நிறுத்துமிடம் இல்லாததால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் சாலையோரங்களில் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு ஜவுளி வாங்க சென்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் குறைந்த அளவிலான போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

பாதுகாப்பு தடுப்புகள்

வழக்கமாக தீபாவளி பண்டிகை தொடங்கும் முன் போலீசார் சார்பில் ஒப்பணக்கார வீதியில் சாலையின் இருபுறமும் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்படும். இதனால் பொதுமக்கள் இரும்பு தடுப்புகளை தாண்டி சாலைக்கு செல்ல முடியாது. இதனால் வாகனங்கள் சென்று வர எளிதாக இருந்தது. இந்த நிலையில் தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஒப்பணக்கார வீதியில் போதிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை. மேலும் தடுப்புகள் இல்லாததால் பொதுமக்கள் சாலையின் குறுக்கே தங்களது குழந்தைகளுடன் வாகனங்களுக்கு நடுவே நடந்து செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவியது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

தீபாவளி தொடங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பே போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அதுபோல் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்படவில்லை. சாலையோரங்களில் இரும்பு தடுப்புகளோ அல்லது பாதுகாப்பு கயிறோ கட்டப்படவில்லை.

கூடுதல் போலீசார்

இதுதவிர மிக குறைந்த எண்ணிக்கையில் போலீசார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அவர்களால் வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மைக் மூலம் போலீசார் அறிவிப்பு செய்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த முயன்றனர்.

ஆனால் கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து சென்றன. எனவே பண்டிகை காலம் முடியும் வரை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசாரை பாதுகாப்பிற்கு நியமிக்க வேண்டும். என்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி பொதுமக்களிடம் ஜேப்படி செய்யும் நபர்களை பிடிப்பதற்காக போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் சீருடையின்றி சாதாரண உடைகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்