பூஜை பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்
விநாயகர் சதுர்த்தி பூஜை பொருட்கள் வாங்க வேலூர் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.;
விநாயகர் சதுர்த்தி பூஜை பொருட்கள் வாங்க வேலூர் கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
விநாயகர் சதுர்த்தி விழா
நாடு முழுவதும் இன்று (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. வேலூர் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட உள்ளது. மேலும் பொதுமக்கள் பலர் தங்கள் வீடுகளில் சிலை வைத்து வழிபாடு செய்வார்கள்.
வேலூர் நகரில் பல்வேறு இடங்களில் தள்ளுவண்டிகளில் களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்கப்பட்டன. பல்வேறு வண்ணங்களில் கண்கவரும் வகையில் இருந்த சிலைகளை பலர் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். இந்த சிலைகள் ரூ.100 முதல் விற்பனை செய்யப்பட்டது.
வேலூர் லாங்கு பஜார் உள்ளிட்ட கடை வீதிகளில் ஏராளமான திடீர் கடைகள் முளைத்துள்ளன. அங்கு சோளக்கதிர்கள், நிலக்கடலை, தீவனப் பயிர்கள், பழங்கள், எருக்கம்பூ மாலை மற்றும் பூஜை பொருட்கள் விற்கப்பட்டது. இதனால் அங்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
பூஜை பொருட்கள்
ஒரு ஜோடி சோளக்கதிர் ரூ.50 முதல் விற்கப்பட்டது. மேலும், அலங்கார குடைகளும் ஏராளமாக விற்கப்பட்டது. லாங்குபஜார், அண்ணாசாலை பகுதிகளில் ஏராளமானவர்கள் விற்பனை செய்தனர். வேலூர் கோட்டை காந்திசிலை முன்பும் அலங்கார குடைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு ரூ.20 முதல் ரூ.250 வரை விற்கப்பட்டது.
பூஜைகளுக்கு தேவையான மஞ்சள், குங்குமம், வெற்றிலை, தேங்காய், பூ, பழம் உள்ளிட்டவற்றின் விற்பனையும் களைகட்டியது. பூ உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.