தஞ்சையில் மீன்கள் வாங்குவதற்காக அலைமோதிய மக்கள் கூட்டம்

தஞ்சையில் மீன்கள் வாங்குவதற்காக மக்கள்கூட்டம் அலைமோதியது. தடைகாலம் முடிந்த நிலையில் முதல்நாளில் கடல்மீன்கள் வரத்தும் குறைவாக காணப்பட்டது. இந்தநிலையில் மீன்கள் விலை அதிகரித்த போதிலும் விற்பனையும் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது;

Update: 2023-06-18 20:24 GMT

தஞ்சையில் மீன்கள் வாங்குவதற்காக மக்கள்கூட்டம் அலைமோதியது. தடைகாலம் முடிந்த நிலையில் முதல்நாளில் கடல்மீன்கள் வரத்தும் குறைவாக காணப்பட்டது. இந்தநிலையில் மீன்கள் விலை அதிகரித்த போதிலும் விற்பனையும் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

மீன்பிடி தடைக்காலம்

தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்க காலத்தில் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதற்கு 61 நாட்கள் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதாவது ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை இந்த தடைகாலம் அமலில் இருக்கும். இதனால் விசைப்படகு மீனவர்கள் இந்த காலக்கட்டத்தில் மீன்பிடிக்க கடலுக்கு செல்வது இல்லை. இந்த தடை காலங்களில் கடல்மீன்கள் வரத்து அடியோடு பாதிக்கப்படும். இதனால் உள்நாட்டு மீன்கள் விற்பனை அதிக அளவில் நடைபெறும்.

இந்த ஆண்டு மீன்பிடி தடை காலம் முடிந்து நேற்று முதல் நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன்கள் விற்பனை அதிக அளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. தஞ்சையில் மொத்த மீன்மார்க்கெட் கீழவாசல் பகுதியிலும், சில்லறை மீன்கள் விற்பனை கொண்டிராஜபாளையம் பகுதியிலும் நடைபெற்று வருகின்றன. தஞ்சை மீன்மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கடல்மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

மீன்கள் ஏலம்

குறிப்பாக நாகை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் இருந்து கடல்மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இது தவிர நண்டுகள் மேற்கு வங்காளத்தில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும். உள்நாட்டு மீன்கள் திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

தஞ்சைக்கு கொண்டுவரப்படும் மீன்கள் கீழவாசல் பகுதியில் ஏலமிடப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சில்லறை விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். வழக்கமாக ஒரு நாளைக்கு 10 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். அன்று மட்டும் 30 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படும்.

கடல்மீன்கள் வரத்து குறைவு

ஆனால் மீன்பிடி தடைகாலம் கடந்த 14-ந்தேதியுடன் முடிவடைந்த நிலையில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். தஞ்சை மார்க்கெட்டிற்கு நேற்று 50 டன் வரை மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு ஏலமிடப்பட்டு விற்பனை நடைபெற்றது. சில்லறை வியாபாரிகளும் மீன்களை அதிக அளவில் வாங்கி சென்றனர்.

ஆனால் கடல்மீன்கள் வரத்து குறைவாக இருந்தது. சங்கரா, கிளங்கா, இறால், அயிலை, கொடுவா, மஞ்சகோரை போன்ற வகையான மீன்களே விற்பனைக்கு வந்தன. குறைவாக கடல்மீன்கள் வந்ததால் விலை அதிகமாக காணப்பட்டது. வழக்கமாக விற்பனை செய்யப்பட்ட மீன்கள் விலையை விட நேற்று ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.50 வரை விலை உயர்ந்து காணப்பட்டது. விலை உயர்ந்து காணப்பட்டதாலும் கடல்மீன்கள் மற்றும் உள்ளூர் மீன்களை பொதுமக்களும் போட்டி, போட்டுக்கொண்டு வங்கி சென்றனர். இதனால் மீன்மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிக அளவில் காணப்பட்டது.

விலை விவரம்

தஞ்சை மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட மீன்கள் கிலோ கணக்கில் (அடைப்புக்குறிக்குள் மொத்த விலை) விலை விவரம் வருமாறு:-

உயிர்கெண்டை ரூ.150 (130), விறால் பெரியது ரூ.400 (ரூ.350), சிறியது ரூ.300 (250), ராமேஸ்வரம் நண்டு ரூ.500, இதர வகைகள் ரூ.300, சங்கரா பெரியது ரூ.300 (250), சிறியது ரூ.230 (180), கிளங்கா பெரியது ரூ.170 (130), சிறியது ரூ.100 (80), இறால் ரூ.300 (250), கொடுவா ரூ.500 (400), அயிலை ரூ.140 (100), மஞ்சக்கோரை ரூ.170 (130), மதன கொடுவா ரூ.350 (300), ஊடான் ரூ.270 (220).

-------------------------------------------------------------

ஒரே நாளில் 50 டன் மீன்கள் விற்பனை

மீன்கள் விற்பனை குறித்து மொத்த வியாபாரி நேதாஜி கூறுகையில், தஞ்சை மீன்மார்க்கெட்டில் கடல்மீன்கள் மற்றும் உள்ளூர் மீன்கள் நேற்று அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டன. மீன்பிடி தடைகாலம் முடிந்து மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற மீனர்கள் கரை திரும்ப இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும். தற்போது ஒரே நாளில் கடலுக்குள் சென்று மீன்பிடித்துக்கொண்டு திரும்பும் மீனவர்கள் தான் வருகின்றனர். இதனால் மீன்கள் வரத்து குறைவாக உள்ளது. தஞ்சைக்கும் கடல்மீன்கள்வரத்து குறைந்த அளவே வந்தன. இதனால் விலை உயர்ந்து காணப்பட்டது. இருப்பினும் விற்பனை அதிக அளவில் இருந்தது. அமாவாசை, பிரதோஷம் என கடந்த சில நாட்களாக மீன்கள் விற்பனை டல் அடித்த நிலையில் விற்பனை அதிக அளவில் நடைபெற்றது. தஞ்சையில் இருந்து தஞ்சை, பேராவூரணி, பட்டுக்கோட்டை உள்பட தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மீன்கள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். கடல்மீன்கள், உள்ளூர் மீன்கள் என நேற்று மட்டும் 50 டன் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றார்.

--------------------------------

இருசக்கர வாகனங்களால்

போக்குவரத்து நெரிசல்

தஞ்சை கொண்டிராஜபாளையம் பகுதியில் உள்ள தற்காலிக மீன்மார்க்கெட்டில் அதிகாலை முதல் மதியம் 12 மணி வரை கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. எல்லா மீன்கடைகளிலும், மீன்வெட்டும் இடங்களிலும் கூட்டம் காணப்பட்டது. கூட்டம் அதிகமாக இருந்ததால் சிலர் மீன்களை வாங்கிக்கொண்டு வெட்டாமல் வீட்டிற்கு எடுத்துச்சென்றனர். மீன்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் கார் மற்றும் ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் மீன்மார்க்கெட்டை சுற்றிலும் உள்ள பகுதிகளில் சாலையோரங்களில் கார்கள், இருசக்கர வாகனங்கள் அணி வகுத்து நின்றன. அதிக அளவில் சாலையோரங்களில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இந்த வழியாகத்தான் கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, மயிலாடுதுறை, சிதம்பரம் பகுதிக்கு செல்லும் பஸ்கள் செல்லும். இருசக்கர வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அந்த பகுதியில் போலீசாரும் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்