மீன்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்
நாகை மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்கள் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. மீன்கள் வரத்து குறைவால் ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.900-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நாகை மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்கள் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது. மீன்கள் வரத்து குறைவால் ஒரு கிலோ வஞ்சிரம் ரூ.900-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மீனவர்கள்
நாகை மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியாா், செருதூர், வெள்ளப்பள்ளம், வாணவன்மகாதேவி உள்பட பல மீனவ கிராமங்கள் உள்ளன.
இங்குள்ள மீனவர்கள் விசைப்படகுகள், மற்றும் பைபர் படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள். இந்தநிலையில் மீன்பிடி தடைக்காலத்துக்கு பின் கடந்த சில வாரங்களாக நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள். இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலத்துக்கு பின் மீன்பிடிக்க சென்ற நாகை மீனவர்களுக்கு போதிய அளவு மீன்கள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
மீன்பிடிக்க சென்றனர்
நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த வாரம் நூற்றுக்கணக்கான விசைப் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றன. நேற்று அதிகாலை 3 மணியளவில் 50-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பின. நேற்று விடுமுறை தினம் என்பதால் மீன்களை வாங்க மீன் பிரியர்கள், மீன் வியாபாரிகள் அதிகாலையிலேயே நாகை துறைமுகத்தில் திரண்டனர்.
ஆனால் நேற்று மீன்கள் வரத்து மிகவும் குறைவாகவே காணப்பட்டது. ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவு செய்து கடலுக்கு சென்ற தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக நாகை மாவட்ட மீனவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
கேரளா வியாபாரிகள்
கேரள மாநிலத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால், கேரள மீன் வியாபாரிகள் மீன்களை வாங்குவதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்னதாகவே நாகையில் முகாமிட்டு, அதிகளவில் மீன்களை வாங்கி கனரக வாகனத்தில் ஏற்றி கொண்டு கேரளாவுக்கு சென்றனர்.
மேலும் மீன்கள் குறைந்த அளவே கிடைத்துள்ளதாகவும், விலை சற்று கூடுதலாக உள்ளதாகவும் கேரளா வியாபாரிகள் தெரிவித்தனர். இதே போல், திருச்சி, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மீன் வியாபாரிகள் மீன்களை வாங்க வந்தனர். இதனால் நாகை மீன்பிடி துறைமுகம் நேற்று களை கட்டியது.
வஞ்சிரம் கிலோ ரூ.900
இந்த நிலையில் மீன் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ இறால் ரூ.200 முதல் ரூ.700 வரையிலும் விற்பனையானது. வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.450 முதல் ரூ.900 வரையும், வவ்வால் ஒரு கிலோ ரூ.1300-க்கும், சங்கரா ரூ.270-க்கும், சீலா ரூ.350-க்கும், கிழங்கான் ரூ.150-க்கும், நெத்திலி ரூ.120-க்கும், செம்புரா ரூ.250-க்கும், பாறை ரூ.550-க்கும், பால் சுறா ரூ.750-க்கும், நண்டு ரூ.250 முதல் 400 வரையிலும் நேற்று விற்பனையானது.