குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலிக்குடங்களுடன் திரண்ட பொதுமக்கள்

நாமக்கல் நகராட்சி நரிக்குறவர் காலனியில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-02 19:52 GMT

குடிநீர் வினியோகம்

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட 38-வது வார்டு நரிக்குறவர் காலனியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு காவிரி குடிநீர் மற்றும் ஆழ்துளை கிணறு மூலம் பிற பயன்பாட்டுக்கான தண்ணீரும் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2 வாரத்திற்கு மேலாக காவிரி குடிநீர் மற்றும் போர்வெல் தண்ணீரும் போதிய அளவு வினியோகிக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதனால் அவர்கள் சீரான குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி காலிக்குடங்களுடன் அப்பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தீர்வு காண வேண்டும்

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

நரிக்குறவர் காலனியில் உள்ள மக்கள் அனைவரும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். கடந்த 2 வாரங்களாக காவிரி குடிநீர் மற்றும் போர்வெல் தண்ணீரும் வினியோகிக்கப்படவில்லை. அத்தியாவசிய தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லை. விலை கொடுத்து வாங்க முடியாத காரணத்தால் சுமார் 2 கி.மீ. தூரம் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது.

வீட்டில் பெரியவர்கள் இல்லாத சமயத்தில் சிறுவர்கள் தண்ணீர் எடுத்து வர இருசக்கர வாகனத்தில் சென்றால் போலீசார் பிடித்து அபராதம் விதிக்கின்றனர்.

இதேபோல் நரிக்குறவர் காலனி வீதியில் சாக்கடை வசதியில்லை. இதனால் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் சாலையில் குளம்போல் தேங்கியுள்ளது. மேலும் இப்பகுதியில் பஸ் வசதியும் இல்லை.

குடிநீர் வினியோகம் இல்லாமல் நாங்கள் மிகவும்அவதி அடைந்து வருகிறோம். எனவே நகராட்சி நிர்வாகம் தண்ணீர் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணவேண்டும். இவ்வாறுஅவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்