விடுமுறை நாட்களில் அலைமோதும் கூட்டம்:கொடிவேரி - பவானிசாகர் அணையில் வசதிகள் மேம்படுத்தப்படுமா?

சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

Update: 2023-01-02 19:30 GMT

உலகத்தையே உள்ளங்கையில் கொண்டு வந்து கொடுத்துவிட்டது செல்போன். இருந்த இடத்தில் இருந்தே முக்கிய இடங்களின் புகைப்படங்களையும், வீடியோக்களையும், அதன் கலாசாரத் தையும் தெரிந்து கொள்ளும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து இருக்கிறது.

சுற்றுலா

எத்தனை அரிய தகவல்கள் கிடைத்தாலும் கண்களுக்கு விருந்தளிக்கும் இயற்கை காட்சிகளை நேரில் கண்டு களிக்கும் சுகம் எந்த தொழில் நுட்பத்தாலும் கொடுக்க முடியாது. எனவே சுற்றுலா பிரியர்கள் செலவு பாராமல் தாங்கள் கேள்விப்படும், விரும்பும் இடங்களுக்கு சென்று மனநிறைவு பெறுகிறார்கள்.

சுற்றுலா மூலமாக ஒரு நாட்டின் கலாசாரம், பாரம்பரியம் வெளிஉலகத்துக்கு தெரியவருகிறது. அதுபோல் இயற்கை ஆர்வலர்கள், கொடையாக பெற்ற இயற்கை வளங்களை நேரில் சென்று பார்த்து வாழ்வை அனுபவிக்க முயற்சி செய்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் அருகில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று சந்தோஷமாக இருக்க விரும்புகிறார்கள். அதிக தூரம் சென்றால் அதிக நாட்கள் விடுமுறை தேவை, செலவுக்கு அதிக பணம் தேவை என்று கருதி நெடுந்தூர சுற்றுலா செல்வதை தவிர்க்கிறார்கள்.

கொடிவேரி அணை

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை மற்ற மாவட்டங்களை காட்டிலும் சுற்றுலா தலங்களை விரல்விட்டு எண்ணிவிடும் அளவில்தான் உள்ளன. குறிப்பாக பவானி கூடுதுறை, கொடிவேரி அணை, சென்னிமலை முருகன் கோவில், பவானிசாகர் அணை, பண்ணாரி அம்மன் கோவில், பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், வெள்ளோடு பறவைகள் சரணாலயம் ஆகிய முக்கியமான சுற்றுலா இடங்களுக்கு பொதுமக்கள் அதிகமாக செல்கிறார்கள். இதில் பெரும்பாலும் கோவில்களாக இருப்பதால் சிறுவர், சிறுமிகளை விளையாட வைத்து பொழுதை கழிப்பதற்கு உரிய இடம் இல்லை. எனவே விடுமுறை நாட்களிலும், பண்டிகை காலத்திலும் ஈரோடு மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் கொடிவேரி அணைக்கும், பவானிசாகர் அணைக்கும் படைஎடுக்கிறார்கள்.

கொடிவேரியில் அமைக்கப்பட்டு உள்ள தடுப்பணையில் இருந்து நிரம்பி வழியும் தண்ணீர் அருவியைப்போல் கொட்டுவதால் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் வகையில் உள்ளது. அங்கு ஆனந்த குளியல் போடும் சுற்றுலா பயணிகள் அணையின் வளாகத்தில் விற்கப்படும் சூடான மீன் வறுவலையும் சுவைத்து சாப்பிடுகிறார்கள். இதேபோல் பூங்காவில் உள்ள ஊஞ்சல், சீசாவில் குழந்தைகளை விளையாட வைத்தும் பெற்றோர்கள் மகிழ்கிறார்கள். இதனால் ஒருநாள் முழுவதும் பொழுதை ஆனந்தமாக கழிப்பதற்கு உகந்த இடமாக இருப்பதால் கொடிவேரி அணைக்கு குடும்பம், குடும்பமாக சுற்றுலா வருபவர்களை காணமுடிகிறது.

பவானிசாகா் அணை

பவானிசாகர் அணை ஈரோடு மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கிறது. இந்த அணையை காணவும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகிறார்கள். ஆனால் ஆண்டுக்கு ஒருமுறை ஆடிப்பெருக்கு விழாவின்போது அணையின் மேல் பகுதியில் சென்று பரந்து விரிந்து கடல்போல் காட்சி அளிக்கும் தண்ணீரை காணுவதற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். மற்ற நாட்களில் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணையில் இருந்து மதகுகள் வழியாக கீழ்பவானி வாய்க்காலில் திறக்கப்படும் தண்ணீரையும், அணையின் பூங்காவையும் பார்த்துவிட்டு செல்கிறார்கள். அதிலும் பூங்காவில் முக்கிய விளையாட்டு உபகரணங்கள், பசுமை வாய்ந்த புல்வெளிகள் உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் இருப்பது சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.

எனவே மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களை மேம்படுத்த தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும் கருத்துக்களை காணலாம்.

அடிப்படை வசதிகள்

கோபி அருகே தொட்டிபாளையத்தை சேர்ந்த நந்தகுமார்:-

நான் பெயிண்டிங் வேலை செய்து வருகிறேன். கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு குடும்பத்துடன் அடிக்கடி சுற்றுலா சென்று வருவோம். அந்த அணையில் பல லட்சம் ரூபாய் செலவில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறிவருகிறார்கள். ஆனால் இதுவரை திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரவில்லை.

சுற்றுலா பயணிகள் குளிக்கும் இடத்தில் அமைக்கப்பட்ட கான்கிரீட் தளம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அடித்து செல்லப்பட்டுவிட்டது. அதன்பிறகு அங்கு கான்கிரீட் தளம் அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பாதுகாப்பாக குளிக்க முடிவதில்லை.

அருவியில் நின்று குளிக்கும் சுற்றுலா பயணிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே கொடிவேரி அணையில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

போக்குவரத்து நெரிசல்

நஞ்சைகோபியை சேர்ந்த விவசாயி கதிர்வேல்:-

கொடிவேரி அணைக்கு அடிக்கடி சுற்றுலா செல்வது வழக்கம். அங்கு கழிப்பறை வசதிகள், ஆண்கள், பெண்களுக்கு உடைமாற்றும் அறைகள் இல்லாததால் சுற்றுலா பயணிகள் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக அணையில் குளித்துவிட்டு வரும் பெண்கள் உடை மாற்ற அறை இல்லாததால் பெரும் அவதி அடைகின்றனர்.

கொடிவேரி அணையில் இன்னும் பல அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க வேண்டும். இருசக்கர வாகனங்கள், கார், வேன், பஸ் போன்ற வாகனங்கள் நிறுத்துவதற்கு இடமில்லாததால் சாலையின் இருபுறங்களிலும் ஓரமாக நிறுத்தப்படுகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வாகன நிறுத்துமிடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

செயற்கை நீர்வீழ்ச்சி

பவானிசாகர் அருகே உள்ள எரங்காட்டூரை சேர்ந்த சதீஷ் என்கிற பாலசுப்பிரமணியம் (வயது 52) கூறியதாவது:-

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா பூங்காவாக திகழ்வது பவானிசாகர் அணை பூங்கா. இந்த பூங்காவுக்கு ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து செல்கிறார்கள். ஆனால் பவானிசாகர் பூங்காவில் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு மட்டுமே உள்ளது. பெரியவர்களுக்கு என்று எதுவும் இல்லை. ஆடி மாதம் 18-ந் தேதி ஆடிப்பெருக்கு விழாவின்போது மட்டும் அணைக்கு மேலே செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதுவும் கடந்த 2 ஆண்டுகளாக அணையில் நீர்இருப்பு அதிகமாக இருந்ததால் அணையின் மேலே செல்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

அணையின் அருகிலேயே இருக்கும் பவானிசாகர் பூங்காவில் செயற்கை நீர்வீழ்ச்சி அமைத்து அந்த நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதித்தால் பொதுப்பணித்துறைக்கு வருமானமும் அதிகரிக்கும். சுற்றுலா பயணிகளுக்கு பயன் உள்ளதாக அமையும்.

வனவிலங்குகள், பறவைகள்

சத்தியமங்கலம் அருகே அக்கரை நெகமம் பகுதியை சேர்ந்த சரண்யா மனோஜ் கூறியதாவது:-

நான் ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறேன். வார விடுமுறை தினத்தில் குடும்பத்துடன் பவானிசாகர் பூங்காவுக்கு செல்வோம்.

ஆனால் பூங்காவில் ஊஞ்சல், சறுக்கு பாறை போன்ற சாதாரண பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமே உள்ளன.

கர்நாடக மாநில பூங்காவில் மான், புலி, யானை, பல்வேறு வகையான பறவைகள் இருக்கும். அது குழந்தைகளை வெகுவாக கவருவதாக உள்ளது. குழந்தைகளும் அங்கே மீண்டும் மீண்டும் செல்லலாம் என்று கூறுவார்கள். ஈரோடு மாவட்டத்திலேயே அதுபோன்ற சிறந்த பூங்கா எங்குமில்லை. எனவே பவானிசாகர் பூங்காவையும் மேம்படுத்தும் வகையில் வன விலங்குகள், பறவைகளை கூண்டுக்குள் அடைத்து வைத்து பொதுமக்களின் பார்வைக்கு வைக்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்