குமரி சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்

குமரி மாவட்ட சுற்றுலா தலங்கள் பயணிகள் வருகையால் களை கட்டியது. திற்பரப்பு அருவியில் உற்சாகமாக குளித்தனர்.

Update: 2022-10-09 18:45 GMT

திருவட்டார்:

குமரி மாவட்ட சுற்றுலா தலங்கள் பயணிகள் வருகையால் களை கட்டியது. திற்பரப்பு அருவியில் உற்சாகமாக குளித்தனர்.

சுற்றுலாதலங்களில் கூட்டம்

பள்ளி காலாண்டு மற்றும் ஆயுதபூஜை தொடர் விடுமுறை கடந்த 30-ந் தேதி விடப்பட்டது. இதையடுத்து விடுமுறையை கொண்டாடும் விதமாக குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்தபடி உள்ளனர்.

அதன்படி கன்னியாகுமரி, பத்மநாபபுரம் அரண்மனை, திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிபாலம், முட்டம் கடற்கரை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தினமும் கூட்டம் அலைமோதியது.

கன்னியாகுமரி

இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கன்னியாகுமரியில் அதிகாலையிலேயே சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அதிகாலையில் கடற்கரையில் திரண்டு சூரிய உதயத்தை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். பலர் தங்களது செல்போன்களில் படம் பிடித்து மகிழ்ந்தனர். பின்னர் முக்கடல் சங்கமத்தில் புனிதநீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்தனர்.

அதை தொடர்ந்து கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை காண படகுத்துறையில் நீண்ட வரிசையில் நின்று உற்சாகத்துடன் படகில் சென்று ரசித்தனர். இதேபோல், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

திற்பரப்பு அருவி

தற்போது மழை குறைந்ததால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் கோதையாற்றின் குறுக்கே அமைந்துள்ள திற்பரப்பு அருவியில் மிதமான தண்ணீர் கொட்டி வருகிறது. நேற்று திற்பரப்புக்கு வெளியூர், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அவர்கள் மிதமாக கொட்டிய தண்ணீரில் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் அருவியின் மேற்பகுதியில் உள்ள தடுப்பணையிலும் படகு சவாரி செய்து கோதையாற்றின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்