மத்திய பஸ் நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் நேற்று மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவையொட்டி கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை ஏராளமான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.
விடிய, விடிய மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்ற பக்தர்கள் இன்று காலை திருவண்ணாமலையில் இருந்து தங்கள் பகுதிக்கு திரும்பி செல்ல மத்திய பஸ் நிலையத்தில் குவிந்தனர்.
இதனால் பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சென்னை, சேலம், புதுச்சேரி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்ற பஸ்களில் பொதுமக்கள் ஓடி சென்று ஒருவரை ஒருவர் முண்டியடித்தபடி இடம் பிடித்தனர்.
இதனால் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.