திருச்செந்தூர் ரெயிலில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

தீபாவளியையொட்டி சொந்த ஊருக்கு செல்ல திருச்செந்தூர் ரெயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. கூடுதல் பெட்டிகள் இணைக்காததால் கடும் அவதிப்பட்டனர்.

Update: 2022-10-23 18:45 GMT

பொள்ளாச்சி, 

தீபாவளியையொட்டி சொந்த ஊருக்கு செல்ல திருச்செந்தூர் ரெயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. கூடுதல் பெட்டிகள் இணைக்காததால் கடும் அவதிப்பட்டனர்.

பயணிகள் கூட்டம்

பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி, மதுரை, நெல்லை வழியாக திருச்செந்தூருக்கு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் பாலக்காட்டில் இருந்து காலை 5.08 மணிக்கு புறப்பட்டு, பொள்ளாச்சிக்கு 6.40 மணிக்கு வந்து, திருச்செந்தூருக்கு மாலை 3.45 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு, பொள்ளாச்சிக்கு இரவு 8.40 மணிக்கு வந்து, பாலக்காட்டிற்கு 9.55 மணிக்கு செல்கிறது. விடுமுறை நாட்கள், பண்டிகை காலங்களில் இந்த ரெயிலில் தென்மாவட்டங்களுக்கு செல்ல பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக சொந்த ஊருக்கு செல்வதற்கு ரெயிலில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அலைமோதியது. பயணிகள் ரெயில் வந்ததும் முண்டியத்துக் கொண்டு ஏறினார்கள். ரெயில்வே போலீசார் பயணிகளை ஒழுங்குப்படுத்தி ஏற்றினார்கள். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

கூடுதல் பெட்டிகள் இல்லை

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் தென்மாவட்ட மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். பஸ்களில் அதிக கட்டணம் என்பதால் பெரும்பாலும் மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு திருச்செந்தூர் ரெயிலை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக நெல்லை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி போன்ற பகுதிகளுக்கு செல்லும் பயணிகளால் ரெயிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பண்டிகை என்பதால் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதை கருத்தில் கொள்ளாமல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வில்லை. இதனால் பொள்ளாச்சியிலேயே ரெயிலில் உள்ள பெரும்பாலான பெட்டிகள் நிரம்பி விட்டன. இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு பயணம் செய்தனர். எனவே, வருகிற 31-ந் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி வருகிறது. இதையொட்டி பழனி, திருச்செந்தூருக்கு ஏராளமான பக்தர்கள் செல்வார்கள். எனவே, அப்போதாவது ரெயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்