சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுவது வழக்கம். ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை நேற்று என்பதால் பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலில் திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமை, பவுர்ணமி, அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் நடை திறக்கப்படுவது வழக்கம். நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலில் காலை 6 மணியளவில் நடை திறக்கப்பட்டது.
நீண்ட வரிசையில் நின்று...
மேலும் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் காலை முதலே பக்தர்கள் கூட்டம், கூட்டமாக கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டு மதியம் உச்சிகால பூஜை நடைபெற்றது.
மாலையில் தங்கத்தேர் இழுக்கப்பட்டது. இதில் பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பால்குட ஊர்வலம்
மேலும் பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த எண்ணெய், நெய் ஆகியவற்றை வாடா விளக்கில் ஊற்றி வேண்டுதலை நிறைவேற்றினர். ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலில் பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதேபோல் பெரம்பலூர் அருகே விளாமுத்தூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
சந்தனக்காப்பு அலங்காரம்
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் நியூ காலனியில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூர் 19-வது வார்டுக்கு உட்பட்ட சங்குப்பேட்டை அம்பேத்கர் தெருவில் உள்ள பொன்னம்பல சுவாமி கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.