பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

வாரவிடுமுறை, முகூர்த்த நாளையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-09-17 21:00 GMT

வாரவிடுமுறை, முகூர்த்த நாளையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பழனி முருகன் கோவில்

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு, சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வாரவிடுமுறை, முகூர்த்தம் உள்ளிட்ட நாட்களில் பக்தர்கள் வருகை இருமடங்கு காணப்படுவது வழக்கம்.

குறிப்பாக வாரவிடுமுறை நாளில் வெளியூர், வெளிமாநில பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிகின்றனர். அந்தவகையில் நேற்று வாரவிடுமுறை மற்றும் முகூர்த்த நாள் என்பதால் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அதிகாலை முதலே பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். இதனால் கிரிவீதிகள், சன்னதிவீதி, பாதவிநாயகர் கோவில், திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. எனவே அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் படிப்பாதை, யானைப்பாதை வழியாக பக்தர்கள் திரளாக சென்று தரிசனம் செய்தனர்.

2 மணி நேரம் காத்திருப்பு

ரோப்காரில் பராமரிப்பு பணி காரணமாக சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே மின்இழுவை ரெயிலில் செல்ல பக்தர்கள் குவிந்ததால் அடிவாரம் மின்இழுவை ரெயில்நிலையத்திலும் கூட்டம் காணப்பட்டது.

குறிப்பாக ரெயில்நிலையத்தின் வெளிப்பகுதியில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். இதேபோல் பாதவிநாயகர் கோவில், தரிசன வழிகள் மற்றும் மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூட்டம் காரணமாக சுமார் 2 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

70 திருமணங்கள்

ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் என்பதால் நேற்று பழனி திருஆவினன்குடி கோவிலில் 70 திருமணங்கள் நடைபெற்றது. இதனால் அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவில் வெளிப்பகுதியில் வைத்தும் பலர் திருமணம் நடத்தி சென்றனர்.

அதேபோல் அடிவார பகுதியில் உள்ள மண்டபங்களிலும் திருமணம் நடந்ததால் சாலையோரம் கார்கள், வேன்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் அடிவார பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக சன்னதி வீதி, பூங்காரோடு, குளத்துரோடு ஆகிய இடங்களில் நெரிசலால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

கிரிவீதியில் வாகனங்களுக்கு தடை

பழனி அடிவாரத்தில் போக்குவரத்து நெரிசலை தடுப்பது குறித்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அப்போது அடிவாரம் கிரிவீதிகள், சன்னதி ரோடு, அய்யம்புள்ளி ரோடு ஆகிய சாலைகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்ய ஆலோசிக்கப்பட்டது. அதன்படி நேற்று கிரிவீதியில் 4 சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதேபோல் சில சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்