நிலக்கோட்டை ஆட்டுச்சந்தையில் குவிந்த வியாபாரிகள்

நிலக்கோட்டையில் ஆட்டுச்சந்தையில் வியாபாரிகள் குவிந்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஆனது.

Update: 2022-11-05 16:28 GMT

நிலக்கோட்டையில், அணைப்பட்டி சாலையில் வாரச்சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தையின் தெற்கு பகுதியில் ஆட்டுச்சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சனிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று ஆட்டுச்சந்தை களைகட்டியது. ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் குவிந்தனர். இதனால் ஆட்டுச்சந்தை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஆட்டுச்சந்தை வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் ஆட்டுச்சந்தையில் வியாபாரம் நடத்த முடியவில்லை. இதைத்தொடர்ந்து நிலக்கோட்டையில், அணைப்பட்டி சாலையில் ஆட்டுச்சந்தை மாற்றப்பட்டு, அங்கு நடந்தது.

ஆனால் ஆட்டுச்சந்தை நடைபெற்றதால் அணைப்பட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் நெரிசல் ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் பூமார்க்கெட் அமைந்துள்ளதால், மார்க்கெட்டுக்கு வந்த வியாபாரிகளுக்கும், ஆட்டுச்சந்தைக்கு வந்த வியாபாரிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சரிசெய்தனர். மேலும் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, ஆட்டுச்சந்தை வளாகத்தில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டது.

இதையடுத்து ஆட்டுச்சந்தை வளாகத்தில் வியாபாரம் நடைபெற்றது. இதற்கிடையே பூ மார்க்கெட்டிற்கும், ஆட்டுச்சந்தைக்கும் இடையே மழைநீர் சீராக வடிந்து செல்லும் வகையில் வாருகால் அமைக்க ேவண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் நிலக்கோட்டையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்