10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நாசம்

திருவாரூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நாசமடைந்தன. இதனால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-09-09 17:01 GMT


திருவாரூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நாசமடைந்தன. இதனால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டூர் அணை திறப்பு

திருவாரூர் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாரான 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் சாய்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா மாவட்டத்தில் குறுவை சாகுபடியை மேற்கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்தநிலையில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், கடந்த 75 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மே மாதம் 24-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.இதனால் எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்துள்ளனர். குறுவை சாகுபடிக்காக பயிர் காப்பீடு செய்வதற்கான அறிவிப்பை அரசு வெளியிடப்படவில்லை.மேலும் முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டு குறுவை சாகுபடி தொடங்கப்பட்டுள்ளதால் வடகிழக்கு பருவ மழையினால் ஏற்படும் பாதிப்பு தவிர்க்கப்படும் என வேளாண்மை துறை அறிவித்திருந்தது.

நெல் கொள்முதல்

இதனால் வழக்கமாக அக்டோபர் மாதம் தொடங்கும் அறுவடை ஒரு மாதம் முன்னதாக தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இதனால் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.அந்த அறிவிப்பின்படி கடந்த 1-ந் தேதி முதல் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், குடவாசல், மன்னார்குடி, நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது. இதுவரை 63 நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

அறுவடை எந்திரங்கள்

இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, நீடாமங்கலம், மன்னார்குடி ஆகிய பகுதிகளில் அறுவடைக்கு தயாரான குறுவை பயிர்கள் பாதிக்கப்பட்டுவயல்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் பயிர்கள் சாய்ந்து உள்ளன. தற்போது வயல்களில் தேங்கி நிற்கும் தண்ணீர் வடிய முடியாத நிலையில் விட்டு விட்டு கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அறுவடை எந்திரங்களை கொண்டு அறுவடை செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.

10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள்

மழைநீடிக்கும் பட்சத்தில் இன்னும் சில இடங்களில் தண்ணீரில் சாய்ந்த நெல் மணிகள் முளைக்கும் அபாயம் உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் அறுவடைக்கு தயாரான 10 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பால் கட்டும் பருவத்தில் உள்ள பயிர்களும் சாய்ந்துள்ளதால் மகசூல் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறுவை பயிருக்கு காப்பீட்டை அரசு அறிவிக்காத நிலையில் காலம் தவறிய மழையினால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

நிவாரணம்

இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் மாசிலாமணி கூறியதாவது:- மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டதால் விவசாயிகள் வழக்கமான பரப்பளவை விட கூடுதலான நிலையில் குறுவை சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுடைக்கு தயாரான நிலையில் வழக்கத்துக்கு மாறாக மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் குறுவை நெற்கதிர்கள் அழுகி முளைத்திடும் நிலை ஏற்பட்டு உள்ளது.குறுவை சாகுபடிக்கான காப்பீடு திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த இயலாத நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் தமிழக அரசின் மாநில இடர்பாடு நிதியிலிருந்து ஈடு செய்யப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. எனவே குறுவை நெல் அறுவடை முழு பாதிப்புக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.42 ஆயிரம், பாதி அளவு பாதிப்புக்கு உரிய அளவு நிவாரணமும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்