'காவிரி டெல்டாவில் கருகும் பயிர்கள்': மேட்டூர் அணை திறக்க பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை
பிப்ரவரி 15 வரை மேட்டூர் அணையை திறந்து பாசனத்திற்கு தண்ணீர் கொடுக்க அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கங்களின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் நீர்ப்பாசனத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார்.;
சென்னை,
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகனை இல்லத்தில் சந்தித்து காவிரி டெல்டாவில் சம்பா, தாளடி பயிர்கள் மொத்த சாகுபடி பரப்பில் 40 சதவீதம் கருகத் தொடங்கியுள்ளது. பிப்ரவரி 15-ந்தேதி வரையிலும் தண்ணீர் கொடுத்தால் மட்டுமே பாதுகாக்க முடியும். எனவே உடனடியாக ஒரு குழுவை அனுப்பிவைத்து ஆய்வு செய்ய வேண்டும்.
தண்ணீர் திறக்காவிட்டால் பயிர்கள் அழிந்து போகும் என்பதை எடுத்துரைத்தேன். நாளொன்றுக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்தால்கூட அதனை பாசனத்திற்கு கொண்டு சேர்க்கும் திறமை நமது பாசனத்துறையில் உள்ளது. கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் அதை நீர் பாசனத்துறை நிரூபித்து காட்டி உள்ளது. அதன் அடிப்படையில் தற்போது உள்ள தண்ணீரை விடுவித்து, பிப்ரவரி 15-ந்தேதி வரை பாசனத்திற்கு பயன்படுத்துவதற்கான அவசரகால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினேன்.
அதற்கு அமைச்சர், விவசாயிகள் உற்பத்தி செய்யும் ஒருபயிர் கருகினாலும் என் மனம் ஏற்காது. நானும் அவ்வாறு பாதிக்கப்பட்ட விவசாயிகளில் ஒருவன். எனவே விவசாயிகள் அச்சப்பட வேண்டாம். குடிநீர் தட்டுப்பாடு வந்துவிடும் என்கிற அச்சம் இருக்கிறது. குடிநீருக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய தேவை உள்ளது. எனவே இருக்கும் தண்ணீரை பகிர்ந்தளிப்பது குறித்து தலைமைச்செயலாளர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்து பேசி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்தார்.
மேகதாது அணை கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்தும் பணியை தொடங்கிவிட்டதாக கர்நாடக கவர்னர் குடியரசு தின உரையில் அறிவித்திருப்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டிலும், ஆணையத்திலும் முறையிட வேண்டும் என கேட்டுக்கொண்டேன். முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டுவது ஒன்றுதான் தீர்வு என்கிற அடிப்படையில் கேரளா அரசு எடுக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். பேபி அணையை பலப்படுத்தும் பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.