ஆளில்லா விமானம் மூலம் பயிர்களுக்கு மருந்து தெளிப்பு
பொத்தரை கிராமத்தில் ஆளில்லா விமானம் மூலம் பயிர்களுக்கு மருந்து தெளிப்பு குறித்து செயல் விளக்கம் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள பொத்தரை கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனம் இணைந்து ஆளில்லா விமானம் மூலம் நானோ யூரியா மற்றும் நானோ டி.ஏ.பி. தெளிப்பு செயல் விளக்கம் செய்து காட்டினர்.
நிகழ்ச்சிக்கு போளூர் வேளாண்மை உதவி இயக்குனர் சவிதா தலைமை தாங்கினார். துணை வேளாண்மை அலுவலர் ராமு வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் கலந்துகொண்டு ஆளில்லா விமானம் மூலம் பயிர்களுக்கு யூரியா மற்றும் டி.ஏ.பி. தெளிக்கும் முறைகளைப் பற்றியும், அதனால் ஏற்படும் பயன்கள், குறைவான செலவு, குறைந்த நேரம், ஆள்குறைப்பு போன்றவற்றை செயல் விளக்கம் மூலம் விளக்கினர்.
இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.