'பயிர் காப்பீடு அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்' - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

பயிர் காப்பீடு பிரீமியம் கட்டுவதற்கான கடைசி தேதியை டிசம்பர் முதல் வாரம் வரை நீட்டிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

Update: 2023-11-15 07:15 GMT

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்த ஆண்டு காவிரியில் இருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படாத நிலையில், டெல்டா விவசாயிகள் ஆழ்துளை கிணற்றுப் பாசனம் மூலம் சம்பா சாகுபடி பணிகளை துவக்கியுள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இழப்பீடு பெற விவசாயிகள் கிராம நிர்வாக அதிகாரிகளிடம் அதற்குரிய சான்றிதழ் பெற்று இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பெய்யும் பருவ மழையின் காரணமாக இணைய சேவை சரிவர கிடைக்காததால் எந்த விண்ணப்பங்களையும் உள்ளீடு செய்ய இயலாமல் விவசாயிகளும், இ-சேவை மைய ஊழியர்களும் தவித்த வண்ணம் உள்ளனர். தொடர்ந்து விவசாயிகளும், விவசாய சங்கங்களும் கால நீட்டிப்பு செய்யும் கோரிக்கையினை எழுப்பியும், விடியா திமுக அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கடுங்கோபத்தில் உள்ளனர்.

இந்நிலையில் பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசிநாள் என்ற நிலையில் இணைய வழி சேவை எப்பொழுது சீராகும் என்பது தெரியாத நிலையில், விவசாயிகளும், இ-சேவை மைய ஊழியர்களும் பயிர் காப்பீடு விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளனர். எனவே, உடனடியாக விடியா அரசின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, தமிழகம் முழுவதும் பயிர் காப்பீடு பிரீமியம் கட்டுவதற்கான கடைசி தேதியை டிசம்பர் முதல் வாரம் வரை நீட்டிக்க வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்