பயிர்களின் வளர்ச்சி அதிகரிக்கும்

அங்கக உரங்களை பயன்படுத்தினால் பயிர்களின் வளர்ச்சி அதிகரிக்கும் என்று வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-02 19:47 GMT

பட்டுக்கோட்டை,

அங்கக உரங்களை பயன்படுத்தினால் பயிர்களின் வளர்ச்சி அதிகரிக்கும் என்று வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். இது குறித்து பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் மாலதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அங்கக வேளாண்மை

அங்கக வேளாண்மை என்பது இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, உயிரியல் செயல்பாடுகள், அங்கக கழிவுகள் ஆகியவற்றை கொண்டு சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தை காக்கும் பயிர் வளர்ப்பு முறையாகும். இயற்கை சூழலை பாதுகாக்கும் வகையிலான உழவியல், உயிரியல், எந்திர முறைகளை பின்பற்றுதல் இதன் தனித்தன்மையாகும். அங்கக உரங்களை பயன்படுத்துவதன் மூலம் மண்ணின் தரம் மேம்ப டுத்தப்படுவதோடு தரமான உணவுப் பொருட்களையும் உற்பத்தி செய்யலாம்.

நுண்ணுயிர் கூட்டு கலவை

அங்கக உரங்களை பயன்படுத்துவதால் பயிர்களின் வளர்ச்சியானது கணிசமான அளவில் அதிகரிக்கிறது. நல்ல தரமற்ற நிலங்களை தரமான வளமான நிலங்களாக மாற்றுவதில் அங்கக உரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அங்கக கழிவுகளை அங்கக உரங்களாக மட்க வைத்து பயன்படுத்துதல் என்பது மிகவும் முக்கியமானதாகும்.இதில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிர் கூட்டு கலவையின் பங்கு மகத்தான ஒன்றாக கருதப்படுகிறது. அங்கக கழிவுகளான வைக்கோல், நெல் உமி, பயிர் கழிவுகள், நிலக்கடலை தோல், தென்னங்கீற்றுகள், பல பயிர் கழிவுகள், கால்நடை கழிவுகள் மற்றும் வீட்டு காய்கறி கழிவுகள் ஆகியவற்றை மக்க வைப்பதற்கு தமிழ்நாடு நுண்ணுயிர் கூட்டு கலவை பயன்படுத்தப்படுகிறது.

அங்கக கழிவுகள்

நுண்ணுயிர் கூட்டு கலவை எளிதில் அங்கக கழிவு மக்குவதற்கு ஏதுவாக பல நன்மை தரும் நுண்ணுயிர்களை கொண்டுள்ளது.இக்கலவையை அங்கக கழிவுகள் மக்குவதற்கு சேர்க்காத பொழுது மக்குதல் செயல் நீண்ட நாட்கள் நடைபெறுகிறது. அதே சமயம் நுண்ணுயிர் கூட்டு கலவையை சேர்க்கும் போது நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு நுண்ணுயிர்களின் செயல்பாடு விரைவாக தொடங்கி குறைந்த காலத்தில் மக்குதல் நிறைவேறுகிறது. ஒரு டன் அங்கக கழிவுகளை மக்க வைப்பதற்கு இரண்டு கிலோ நுண்ணுயிர் கூட்டு கலவையை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து கரைசலாகி பின்பு அங்கக கழிவுகளின் படுக்கையில் நன்றாக தெளித்து கிளறி விட வேண்டும்.

ஊட்டச்சத்துகள்

இவ்வாறு செய்வதன் மூலம் குறைந்த நார்ச்சத்துள்ள கழிவுகள் 60 முதல் 75 நாட்களிலும், அதிக நார்ச்சத்துள்ள கழிவுகள் 90 முதல் 100 நாட்களிலும் மட்கும்.இவ்வாறு தயாரிக்கப்பட்ட மக்கியஉரத்தை ஒரு ஹெக்டருக்கு ஐந்து டன் பயிரிடுவதற்கு முன் அடியுரமாக மண்ணில் இடுவதன் மூலம் வேதியியல், இயற்பியல் மற்றும் உயிரியல் பண்புகள் மேம்படுவதோடு பயிர்கள் ஊட்டச்சத்துக்களை ஏதுவாக எடுத்துக் கொள்வதற்கு உதவுகிறது.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்