காவிரி ஆற்றில் முதலை நடமாட்டம்; வனத்துறையினர் எச்சரிக்கை

காவிரி ஆற்றில் முதலை நடமாட்டம் இருப்பது குறித்து வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-10-10 20:32 GMT

திருச்சி காவிரி ஆற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாகவும், அவ்வப்போது ஆற்றுக்குள் உள்ள முட்புதர் மற்றும் மணல் திட்டுகளில் உலாவுவதாகவும், ஒரு சிலர் புகார் தெரிவித்தனர். இந்தநிலையில் காவிரி ஆற்றில் பொதுமக்களை அச்சுறுத்தி வரும் முதலையை விரைந்து பிடிக்க மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் நடவடிக்கை எடுக்கும்படி திருச்சி மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் கூறினார்.

இந்த உத்தரவை தொடர்ந்து, திருச்சி மாவட்ட வன அலுவலர் கிரண் நேரில் சென்று காவிரி பாலத்தில் இருந்தபடியும், கரையோர பகுதிகளிலும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்கு பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 4 நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் முதலை இருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஆய்வு செய்து வருகிறோம். காவிரி ஆற்றில் மீன்பிடிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும், கரையோரம் வசிக்கும் மக்கள் ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவு கழிவுகளை ஆற்றில் வீச வேண்டாம். அவ்வாறு வீசினால் முதலை மோப்பம் பிடித்து கரையேறி வருவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே இறைச்சி மற்றும் அசைவ உணவுகளை கரையோரத்தில் கொட்ட வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்