கொள்ளிடம் ஆற்றில் முதலை நடமாட்டம்
கொள்ளிடம் ஆற்றில் முதலை நடமாட்டம் உள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.;
அரியலூர் மாவட்டம், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் இப்பகுதி மீனவர்கள் மீன் பிடிப்பது வழக்கம். அதேபோல் நேற்று ராஜா என்ற மீனவர் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது மீன் வலையில் பெரிய மீன் சிக்கி இருப்பதாக நால்வர் சேர்ந்து இழுத்துள்ளனர். அருகில் வந்தபோது தான் மீன்வலையில் முதலை இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் வலையை அங்கேயே போட்டுவிட்டு கரைக்கு திரும்பினர். சுமார் 150 கிலோ இருந்த அந்த முதலை வலையை அறுத்துக்கொண்டு மீண்டும் நீருக்குள் சென்றது. கொள்ளிடம் ஆற்றில் முதலை இருக்கும் செய்தி அறிந்த அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை குளிக்கவும், கால்நடைகளை குளிப்பாட்டவும் கொள்ளிடம் ஆற்றை பயன்படுத்தி வருகின்றனர். எனவே இந்த முதலையால் உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன்பாக முதலையை பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.