ஜெயலலிதா குறித்து விமர்சனம்: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு -அ.தி.மு.க. இரு அணிகளும் கடும் கண்டனம்
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை விமர்சித்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு அ.தி.மு.க.வின் இரு அணிகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்ய நேரிடும் என எச்சரித்துள்ளனர்.
சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கும், அதன் கூட்டணி கட்சியான அ.தி.மு.க.வுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
ஜெயலலிதா குறித்து விமர்சனம்
இதற்கிடையே ஆங்கில நாளிதழுக்கு அண்ணாமலை அளித்த பேட்டியில், "தமிழகத்தின் பல்வேறு நிர்வாகங்கள் ஊழலில் திளைத்தது. முன்னாள் முதல்-அமைச்சர் (ஜெயலலிதா) நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். அதனால்தான் தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக மாறிவிட்டது. அது ஊழலில் முதல் இடம் என்பதை என்னால் சொல்ல முடியும்" என்று கூறியிருந்தார்.
அ.தி.மு.க. உடனான கூட்டணி முறிய வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு, "என்னுடைய கட்சியை வலுப்படுத்த வேண்டும். இதற்காக குரல் கொடுத்து, என்னுடைய தொண்டர்களை உற்சாகப்படுத்தி அவர்களுக்கு தொலைநோக்கு பார்வையை காட்ட வேண்டும். ஒரு அரசியல் கட்சியின் இருப்பு என்பது ஆட்சிக்கு வருவதுதானே தவிர, எப்போதும் கூட்டணியில் நீடிப்பதற்காக அல்ல" என்று அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.
அ.தி.மு.க.வினர் கொந்தளிப்பு
அண்ணாமலையின் இந்த கருத்து அ.தி.மு.க.வினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் விமர்சனத்துக்கு அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
சேற்றை வீசுவதா?
இதுதொடர்பாக அ.தி. மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க.வை விமர்சிப்பதற்கு பதில், தன்னை முன்னிலைப்படுத்தும் வகையில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு இருக்கிறது. அவர் நாவடக்கத்துடன் பேச வேண்டும். கத்துக்குட்டியாக இருக்கும் அண்ணாமலைக்கு வரலாறு, பாரம்பரியம் தெரியாது.
தன்னை முன்னிலைப்படுத்த அவ்வப்போது அ.தி. மு.க. மீது சேற்றை வாருகின்ற செயல் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. மறைந்த தலைவரும், தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் ஜெயலலிதா பற்றி அண்ணாமலை விமர்சனம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் கொதித்து போயிருக்கிறார்கள்.
இதற்கான நிலையை அண்ணாமலை உருவாக்கி இருக்கிறார். அண்ணாமலைக்கு முன்பு இருந்த தமிழக பா.ஜ.க. தலைவர்கள் குறிப்பாக பொன்.ராதாகிருஷ்ணன், தற்போது கவர்னராக இருக்கும் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மந்திரியாக இருக்கும் எல்.முருகன் ஆகியோரது காலகட்டத்தில் தோழமை உணர்வோடு, கூட்டணி தர்மத்தை கடைபிடித்து கூட்டணி கட்சியில் இருந்து கொண்டு விமர்சனம் செய்யாமல் ஒற்றுமையாக இருந்தனர். அண்ணாமலையை பொறுத்தவரை பொறுப்பேற்ற நாளில் இருந்து தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டு, பிரதானமாக வர வேண்டும் என்று கூட்டணி தர்மத்தை மீறியிருக்கிறார்.
கூட்டணி தொடர்கிறதா?
ஜெயலலிதாவை விமர்சித்ததை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் அண்ணா மலையை கண்டிக்க வேண்டும். ஏனென்றால் நாங்கள் கூட்டணி தர்மத்தை மதித்து வருகிறோம்.
கூட்டணி தர்மத்தை அண்ணாமலை மீறும்போது, கூட்டணி தொடர்கிறதா? இல்லையா? என்ற கேள்வி நிச்சயமாக எழும். இதற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் அமித்ஷாவும், ஜே.பி.நட்டாவும் தான்.
மாநில தலைவர் என்ற பொறுப்புக்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை. அதனால்தான் வாய்க்கு வந்தப்படி அவர் பேசி வருகிறார். அ.தி.மு.க. தொண்டர்கள் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் பிரதமர் நரேந்திரமோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் அண்ணாமலையின் செயல்பாடுகளை பார்க்கும்போது பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி தொடரக்கூடாது என்று நினைக்கிறார்கள். இந்த கூட்டணி தொடரக்கூடாது, பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் வரக்கூடாது என்ற நிலையில்தான் அண்ணாமலை இருக்கிறாரா? ஏனெனில் அவரது செயல்பாடுகள் அப்படித்தான் இருக்கிறது.
கண்டிக்க வேண்டும்
இப்போதைய சூழலில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் கூட அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி 30 இடங்களை உறுதியாக கைப்பற்றும். இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் தி.மு.க. மீது கடும் அதிருப்தி காரணமாக, 40-க்கு 40 இடங்கள் கூட வரலாம். இந்தநிலையில், வெண்ணெய் திரண்டு வரும்போது பானையை உடைத்த கதையாக அண்ணாமலையின் நடவடிக்கை இருக்கிறது. அண்ணாமலை கர்நாடகாவில் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக சென்றார். என்ன ஆனது?.
தேர்தலில் பா.ஜ.க. 'அம்போ' ஆகிபோனதுதான் மிச்சம். ஊழல் பற்றி பேசும் அண்ணாமலை, கர்நாடகாவில் 40 சதவீத கமிஷன் ஊழல் பற்றி பேசலாமே.
எல்லாவற்றையும் விட மறைந்த தலைவரை பற்றி பேசலாமா? இதுவரைஅண்ணாமலை சட்டமன்றத்துக்குள் நுழைய முடிந்ததா? 20 வருடங்களுக்கு பிறகு சட்டமன்றத்தில் பா.ஜ.க. நுழைந்தது என்றால், அதற்கு அ.தி.மு.க.தான் காரணம். இதை மறுக்கமுடியுமா? அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இருக்கும்போதுதான் பா.ஜ.க.வுக்கு அடையாளம் இருக்கும். கூட்டணி அச்சாரத்தை முறிக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் அண்ணாமலையை அமித்ஷாவும், ஜே.பி.நட்டாவும் கண்டிக்கவேண்டும்.
கூட்டணி குறித்து மறுபரிசீலனை
இந்த போக்கு தொடர்ந்தால், அதாவது அ.தி.மு.க.வை விமர்சிக்கும் வகையில் அண்ணாமலையின் பேச்சு தொடர்ந்தால் கூட்டணி குறித்து நாங்கள் மறுபரிசீலனை செய்ய நேரிடும். ஆனால் அந்த நிலைக்கு அக்கட்சி தேசிய தலைவர்கள் செல்ல விட மாட்டார்கள் என்று நினைக்கிறோம். அவர்கள் எங்களுடன் நல்ல நட்புறவில் இருக்கிறார்கள். ஆனால் அண்ணாமலைதான் முதிர்ச்சி இல்லாமல் பேசி வருகிறார்.
எனவே இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைவர்களின் கடமையாக இருக்கும். பிரச்சினையை யார் உருவாக்குகிறார்கள்? என்பதே முக்கியம். நாங்கள் பா.ஜ.க.வை விமர்சிக்கிறோமா?
எனவே அண்ணாமலை வாயை அடக்கிட்டு கூட்டணி தர்மத்தை கடைபிடித்தால் அவர்களுக்கு நல்லது. ஏனெனில் இதில் எங்களுக்கு இழப்பு கிடையாது. ஜெயலலிதாவை பற்றி வெளிப்படையாக விமர்சனம் செய்யும்போது, எந்த அ.தி.மு.க. தொண்டர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
அ.தி.மு.க. ஆலமரம்
அண்ணாமலை அ.தி .மு.க.வை பற்றி பேசுவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அ.தி.மு.க. என்பது ஆலமரம். பா.ஜ.க. என்பது செடி. சட்டசபையில் 4 இடங்களை பா.ஜ.க. பிடித்ததற்கு, அ.தி.மு.க.தான் காரணம். அ.தி.மு.க.வுடன் இருந்தால்தான், பா.ஜ.க.வுக்கு பலம்.
இவ்வாறு ஜெயக்குமார் கூறினார்.
ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
இதேபோல் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-
அரசியல் முதிர்ச்சியின்மை
அகில உலகத்தமிழர்கள் போற்றும் ஒப்பற்ற ஒரே அரசியல் தலைவர் ஜெயலலிதா பற்றியும், அ.தி.மு.க. ஆட்சியை பற்றியும் தரக்குறைவாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.
தமிழ்நாட்டில் நடைபெற்ற பல ஆட்சிகள் ஊழல் ஆட்சிகள் என்றும், முன்னாள் முதல்-அமைச்சர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள் என்றும் கூறியிருக்கிறார். இந்த பேச்சு தொண்டர்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
கற்பூர வாசனை
உலகம் போற்றும் உன்னதத் தலைவரை, மறைந்தாலும் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் ஒப்பற்ற தலைவரை, இந்திய திருநாடே வியந்து பார்த்த வீரமிக்க தலைவரை, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாம் ஜெயலலிதாவையும், அவருடைய ஆட்சியையும் தரக்குறைவாக அண்ணாமலை விமர்சித்திருப்பது, ''கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழியைத்தான்'' நினைவுபடுத்துகிறது.
ஜெயலலிதாவின் 1991-1996-ம் ஆண்டு கால ஆட்சி முடிவடைந்தவுடன், அவரை அரசியலில் இருந்து ஓரம் கட்ட வேண்டும் என்ற தீய நோக்கத்தின் அடிப்படையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் பொய் வழக்குகள் பல புனையப்பட்டன. அனைத்து வழக்குகளில் இருந்தும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர் ஜெயலலிதா.
பொற்காலம்
ஜெயலலிதா இந்த மண்ணை விட்டு விண்ணுலகத்திற்கு சென்றபோது, அவர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. அவர் நிரபராதியாகத்தான் இந்த மண்ணை விட்டு சென்றார். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலம் தமிழ்நாட்டின் பொற்காலம்.
உண்மையை உணராமல், மனம் போன போக்கில், 'வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ' என்று பேசுவதை இனி வருங்காலங்களில் அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ள நிலையில் ஒரே கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் மோதிக்கொள்வது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.