வீடு புகுந்து 10 பவுன் சங்கிலி திருட்டு
*திருவானைக்காவல் மேலகொண்டையம்பேட்டையை சேர்ந்தவர் ரங்கநாயகி (வயது 83). இவர் தினமும் காலையில் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று காலை வீட்டை பூட்டிவிட்டு, உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். திரும்பி வந்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, பூஜை அறையில் இருந்த 10 பவுன் சங்கிலி திருட்டு போயிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரூ.15 லட்சம் கடன் வாங்கி மோசடி
*பொன்மலை ஜீவாநகரை சேர்ந்தவர் ஜான்பேனர்ஜி (56). இவரிடம் சரோஜா என்பவர் ரூ.15 லட்சம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் கொடுத்த பணத்தை குறிப்பிட்ட தேதியில் அவர் திரும்ப செலுத்தவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் சரோஜா மீது பொன்மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கஞ்சா விற்ற 2 பேர் கைது
*திருச்சி பாலக்கரை குட்ஷெட் ரோடு பகுதியில் கஞ்சா விற்றதாக கீழப்புதூரை சேர்ந்த சூர்யா (20), காஜாபேட்டை பகுதியில் கஞ்சா விற்றதாக கார்த்திகேயன் (19) ஆகியோரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். 2 பேரிடம் இருந்தும் 145 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
செல்போன் பறிக்க முயற்சி
*குளித்தலையை சேர்ந்தவர் காஜாமொய்தீன் (35). ஓட்டல் ஊழியரான இவர் சம்பவத்தன்று திருச்சி மத்திய பஸ்நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தபோது, அவருடைய செல்போனை பறிக்க முயன்ற லால்குடியை சேர்ந்த அஸ்வின் (19) என்பவரை கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள் திருட்டு
*லால்குடி கீழ பெருங்காவூர் நகரை சேர்ந்தவர் வினோத்குமார் (33). சம்பவத்தன்று திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் நிறுத்தி இருந்த இவரது மோட்டார் சைக்கிளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
*திருச்சி தென்னூர் ரகுமானியபுரத்தில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்கள் விற்றதாக கடை உரிமையாளர் சேக்சலாமத் (36) என்பவரை தில்லைநகர் போலீசார் கைது செய்தனர். அவருடைய கடையில் இருந்து 65 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பணம் பறித்தவர் கைது
*திருச்சி மேல சிந்தாமணியை சேர்ந்தவர் அப்பாஸ் (27). இவர் கரூர் பைபாஸ் சாலையில் தள்ளுவண்டியில் ஓட்டல் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500 பறித்ததாக காந்திமார்க்கெட் பகுதியை சேர்ந்த புலித்தேவன் (24) என்பவரை உறையூர் போலீசார் கைது செய்தனர்.
இரும்பு பொருட்கள் திருடிய 3 பேர் கைது
*திருச்சியில் ரெயில்வே தண்டவாளத்தை சிமெண்டு கட்டையுடன் இணைக்க பயன்படுத்தப்படும் 11 இரும்பு கொக்கிகளை திருடியதாக அய்யலூரை சேர்ந்த சுரேஷ்குமார் (28) என்பவரை திருச்சி ரெயில்வே போலீசார் கைது செய்தனர். இதுபோல் ரெயில்வேக்கு சொந்தமான இரும்பு பொருட்களை திருடியதாக புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரை சேர்ந்த கணேஷ்பாபு (51), அவரிடம் இருந்து திருட்டு பொருட்களை வாங்கியதாக பசுமடத்தை சேர்ந்த அய்யனார் (67) ஆகியோரை பொன்மலை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.