குற்ற தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
திருப்பூர் மாவட்டத்தில் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர்
வந்தாரை வாழவைக்கும் ஊர் என்ற பெயர் திருப்பூருக்கு உண்டு. இதற்கு காரணம் பின்னலாடை நிறுவனங்கள் மூலம் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருவது தான். தமிழகத்தின் தென் மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பை அளித்து வந்த நிலை மாறி படிப்படியாக வெளி மாநில தொழிலாளர்களுக்கும் குறிப்பாக வட மாநில தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை அள்ளி வழங்கும் ஊராக திருப்பூர் வழங்கி வருகிறது.
உழைத்தால் வாழ்வில் உயர்வடையலாம் என்பதற்கேற்ப உழைப்பை செலுத்தினால் இங்கு மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் அது சார்ந்த ஜாப்ஒர்க் நிறுவனங்கள், சாயப்பட்டறைகள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் திருப்பூரில் உள்ளன.
இதன் மூலமாக 8 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள். சமீபகாலமாக ஜவுளி தொழில் நெருக்கடியை சந்தித்த போதிலும் மெல்ல, மெல்ல நிறுவனங்கள் செயல்பட தொடங்கி விட்டன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திருப்பூரில் குடியிருந்து வருகிறார்கள்.
அடையாளம் காண்பதில் சிரமம்
திருப்பூர் மாநகர பகுதியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள்.
தொழிலாளர்கள் நிறைந்த ஊர் என்பதால் மாநகரில் பணப்புழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக குற்ற சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருவது தொடர்கிறது. திருப்பூரை சொந்த ஊராகக் கொண்டவர்கள் குறைவு என்றாலும் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் அதிகம் இங்கு காணப்படுகிறார்கள்.
கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நடந்தால் குற்றவாளிகள் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களாகவும், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களாகவும் இருப்பதால் அவர்களை அடையாளம் காணுவதில் போலீசார் சிரத்தை எடுத்து வருகிறார்கள். மாநகரில் குற்ற சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருவது தொடர்கிறது.
வெளி மாநில தொழிலாளர்கள்
வெளிமாநில தொழிலாளர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு சொந்த ஊர் சென்று விட்டால் அவர்களை அடையாளம் காண்பது மற்றும் கைது செய்வதில் போலீசார் திணறி வருகிறார்கள். பீகார், ஒடிசா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், அசாம் போன்ற மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் அதிகம் வருகிறார்கள். சமீபத்தில் கொங்கு நகர் பகுதியில் நகை அடகு கடையில் பூட்டை உடைத்து திருடிய வட மாநில கொள்ளையர்களை ஓடும் ரெயிலில் போலீசார் மடக்கி பிடித்து நகைகளை மீட்டனர்.
அதுபோல் வெள்ளியங்காடு பகுதியில் வட மாநில பெண்ணை அவரது கணவர் கொலை செய்து சூட்கேசில் வைத்து வீசி சென்ற சம்பவத்தில் போலீசார் துப்புதுலக்கி அடையாளம் காணப்பட்டாலும் அவரது கணவரை இதுவரை கைது செய்யாமல் உள்ளனர்.
வெளி மாநிலங்களில் தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் அங்கிருந்து திருப்பூர் வந்து தொழிலாளர்கள் போர்வையில் பதுங்கி வேலை செய்து, அந்த மாநில போலீசார் இங்கு வந்து அவர்களை கைது செய்த சம்பவம் நடந்துள்ளது. இது போன்ற வெளி மாநில தொழிலாளர்களை திருப்பூரில் பணியமர்த்துவதற்கு முன்பு தொழில் நிறுவனத்தினர் அவர்களின் ஆவணங்களை பதிவு செய்து அடையாளப்படுத்த வேண்டும் என்று மாநகர போலீசார் தொடர்ந்து வலியுறுத்தியும் கூட அந்தப் பணி முழுமை அடையாமல் உள்ளது.
ஆதார் அவசியம்
வாடகைக்கு வீடு கொடுப்பவர்கள் தொழிலாளர்களின் ஆதார் எண்ணை பெற்று அவர்களின் விவரங்களை அந்தந்த போலீஸ் நிலையங்களில் பதிவு செய்து அதன் பிறகு குடியமர்த்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தாலும் கூட அதை பின்பற்றி வாடகைக்கு விடுவதில்லை.
அதன் காரணமாக குற்ற சம்பவங்கள் நடந்தாலும் வீட்டு உரிமையாளர்களுக்கு அவர்கள் வீட்டில் குடியிருப்பவர்களின் உண்மை விவரங்கள் தெரியாமல் உள்ளது. இது போன்ற சம்பவங்களை தவிர்க்க வெளி மாநில தொழிலாளர்களின் முழு விவரங்களை சேகரிப்பது அவசியம் ஆகிறது.
87 திருட்டுகள்
திருப்பூர் மாநகரில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 10 கொலை நடந்துள்ளன. அந்த கொலை சம்பவங்கள் அனைத்தும் துப்பு துலக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோல் வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் 22 நடந்துள்ளன. அதில் 19 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு களவு சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. 3 சம்பவங்கள் துப்பு துலக்காமல் உள்ளன.
திருட்டு சம்பத்தை பொருத்தவரை 87 திருட்டுகள் நடந்துள்ளன. அதில் 70 திருட்டு சம்பவங்கள் கண்டறியப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 17 சம்பவங்கள் நிலுவையில் உள்ளன. 2 கூட்டுக் கொள்ளைகள் நடந்து அந்த இரண்டையும் துப்புதுலக்கி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.
இரவு ரோந்து பணி
திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு குற்ற தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார். தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
மாநகரப் பகுதியில் இரவு நேரங்களில் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுபோல் மாநகரின் ஒதுக்குப்புற பகுதிகளிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளனர்.
---------------
(பாக்ஸ்)
அரங்கேறிய குற்றங்கள்
கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை பதிவான குற்ற சம்பவங்கள் விவரம் வருமாறு:-
கொலை-10, கண்டறியப்பட்டது-10, நிலுவை-இல்லை
வழிப்பறி, கொள்ளை-22, கண்டறியப்பட்டது-19 நிலுவை-3
திருட்டு-87, கண்டறியப்பட்டது- 70, நிலுவை- 17
கூட்டுக் கொள்ளை-2, கண்டறியப்பட்டது-2, நிலுவை-இல்லை
----------
(பாக்ஸ்)
வெகுமதி வழங்கி பாராட்டு
திருப்பூர் மாநகரில் வழிப்பறி, கொள்ளை, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட ஆசாமிகளை கைது செய்து புலன் விசாரணை மேற்கொண்டு கோர்ட்டு விசாரணைக்கு எடுத்து அவர்களுக்கு விரைந்து தண்டனை பெற்றுக் கொடுக்கும் போலீசாரை, போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு வெகுமதி வழங்கி பாராட்டி வருகிறார்.
அதன்படி கடந்த இரண்டு மாதங்களில் குற்ற சம்பவம் நடந்து அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் தண்டனை பெற்றுக் கொடுத்த தனிப்படையினருக்கு வெகுமதி வழங்கி பாராட்டப்பட்டது. 5-க்கும் மேற்பட்ட தனிப்படையினர் பாராட்டை பெற்றுள்ளனர்.
----------