ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிராக கிரிக்கெட் வீரர் தோனி சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு உத்தரவுகளை களங்கப்படுத்தும் வகையில் பதில்மனு தாக்கல் செய்துள்ளதாக எம்.எஸ்.தோனி மனுதாக்கல் செய்துள்ளார்.

Update: 2022-11-04 13:32 GMT

சென்னை,

கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கையின் அடிப்படையில் தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு தோனி 2014 ம் ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கில் தனியார் தொலைக்காட்சி ஆசிரியர், அதிகாரி சம்பத் குமார் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் அதிகாரி சம்பத் குமார் தாக்கல் செய்த பதில் மனுவில் சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு உத்தரவுகள் குறித்து களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார் எனக்கூறி சம்பத் குமார் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையுடன் தோனி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும், இந்த பதில் மனுவானது நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை குலைக்கும் வகையில் இருப்பதனால், அதிகாரியை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்படி தண்டிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்ய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரின் அனுமதியை பெற்றுள்ளதாகவும் தோனி தன்னுடைய மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்