மாற்றுத்திறனாளி மாணவருக்காக உருவாக்கிய சோலார் மோட்டார் சைக்கிள் : தேனி அரசு ஐ.டி.ஐ. மாணவ-மாணவிகள் அசத்தல்

மாற்றுத்திறனாளி மாணவனுக்காக சோலார் மோட்டார் சைக்கிளை தேனி அரசு ஐ.டி.ஐ. மாணவ, மாணவிகள் உருவாக்கி கொடுத்தனர்.

Update: 2022-08-12 16:49 GMT

மாற்றுத்திறனாளி மாணவர்

தேனி மாவட்டம், வைகை அணை அருகே உள்ள குரியம்மாள்புரத்தை சேர்ந்தவர் அழகுசிங்கம். முடிதிருத்தும் தொழிலாளி. இவருடைய மகன் கார்த்திகேயன் (வயது 19). நடக்க முடியாத மாற்றுத்திறனாளியான கார்த்திகேயன் தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) படித்து வருகிறார். அவரை அவருடைய தந்தை தினமும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு தூக்கி வந்து வகுப்பறையில் விட்டுச் செல்வது வழக்கம்.

இந்த காட்சிகளை பார்த்த, அதே தொழிற்பயிற்சி நிலையத்தில் மின்சார பணியாளர் பிரிவில் படித்து வரும் மாணவிகள் நித்யா, பொன்மொழி, மகாலட்சுமி, புனிதா, கவிதா, சுவிதா, கற்பகம், மாணவர்கள் லோகானந்தா, பிரகாஷ், செல்வக்குமார், அருண்கணேஷ், சுரேந்திரன் ஆகிய 12 பேர் கொண்ட குழுவினர் மாணவர் கார்த்திகேயனுக்கு உதவி செய்ய முயன்றனர். இதற்காக அவர்கள் பிரத்யேகமான மோட்டார் சைக்கிளை வடிவமைத்தனர்.

சோலார் மோட்டார் சைக்கிள்

அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சேகரன், பயிற்றுனர் மோகன்குமார் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, மோட்டார் சைக்கிள் தயாரிப்பதற்கான உபகரணங்கள் வாங்கி, மின்சாரம் மற்றும் சூரிய மின் சக்தி (சோலார்) மூலம் இயங்கும் சிறிய அளவிலான மோட்டார் சைக்கிளை தயாரித்தனர். இதற்கான செலவினங்களை மாணவ, மாணவிகள் தங்களின் சொந்த பணத்தில் இருந்து செலவு செய்தனர்.

அதன் மூலம் முன்னால் ஒரு சக்கரம், பின்னால் 3 சக்கரங்களை கொண்ட வண்டியை உருவாக்கினர். மாற்றுத்திறனாளி மாணவர் கார்த்திகேயன் இயக்கும் வகையில் அந்த வாகனம் உருவாக்கப்பட்டது. அவ்வாறு தயாரித்த பிரத்யேக மோட்டார் சைக்கிளை மாணவ, மாணவிகள் முன்னிலையில், தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் சேகரன் மற்றும் பயிற்றுனர்கள் இணைந்து, மாணவர் கார்த்திகேயனிடம் நேற்று வழங்கினர். மேலும் இதனை வடிவமைத்த மாணவ, மாணவிகள் குழுவினரை அவர்கள் பாராட்டினர்.

மனநிறைவு

இதுகுறித்து இதனை தயாரித்த குழுவினரிடம் கேட்டபோது, "மின்சாரம் மூலம் ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால் 45 நிமிடம் இதை இயக்க முடியும். சூரிய மின்சக்தி மூலம் 6 மணி நேரம் சார்ஜ் செய்தால் 1 மணி நேரம் இயக்க முடியும். அதிகபட்சம் 20 கிலோமீட்டர் வேகத்தில் இது இயங்கும். இந்த படைப்பை கோவையில் நடந்த திறன் போட்டியில் காட்சிப்படுத்தினோம். அப்போது பலரும் பாராட்டினர். இதை செய்து கொடுத்ததில் மிகுந்த மனநிறைவு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அவரால் அவருடைய ஊரை சுற்றிப் பார்க்க முடியும்" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்