மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை வலுப்படுத்திட மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை வலுப்படுத்திட மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என்று அதிகாரிகளை கலெக்டர் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2022-09-08 18:15 GMT

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிப்பது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அலுவலர்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

நீர் நிலைகளை பாதுகாத்திடவும், நீர்வளத்தை மேம்படுத்திடவும் மழைநீர் சேகரிப்பை தீவிரமாக செயல்படுத்துவது குறித்து ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்து வேளாண் மற்றும் உழவர் பாதுகாப்புத்துறை, தோட்டக்கலைத்துறை, வனத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண் பொறியியல் துறை போன்ற துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள நீர்வள பாதுகாப்பு குறித்து மத்திய பாதுகாப்புத்துறைக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

மழைநீர் சேகரிப்பு

அனைத்து நீர்வள பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மழைநீரை விரயமாக்காமல் முழுவதுமாக சேகரிக்கவும் நீர்நிலை கட்டமைப்புகளை பலப்படுத்தி கூடுதலான மழைநீரை சேகரிக்கவும், பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை போன்ற அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பை சீரமைத்து மழைநீரை சேகரித்திடவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்கனவே இருந்த நீர்நிலைகளை பராமரிக்கவும், ஆக்கிரமிப்புகளில் உள்ள நீர்நிலைகளை மீட்கவும், அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் நீர்நிலை புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி இக்கட்டமைப்பை வலுப்படுத்திட தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரங்கள், விளம்பரங்கள், பேரணிகள், மனித சங்கிலி நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை இயக்குனர் சுப்ரியா சாஹா, செயற்பொறியாளர் மோகன்ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) ஷோபனா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்