பட்டாசு ஆலை உரிமையாளர் கைது
திருமங்கலம் அருகே வெடி விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அவர் மீது 8 பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
திருமங்கலம்,
திருமங்கலம் அருகே வெடி விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். அவர் மீது 8 பிரிவுகளில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
5 பேர் பலி
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள காண்டை ஊராட்சிக்கு உட்பட்ட அழகுசிறை கிராமத்தில் அனுசுயாதேவி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது.
இந்த பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் மதியம் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் 4 கட்டிடங்கள் தரைமட்டமாகின. அவற்றில் வேலை செய்த கோபி, விக்னேஷ், வல்லரசு, அம்மாசி ஆகியோரும், கொண்டம்மாள் என்ற பெண்ணும் உடல் சிதறி பலியானார்கள். 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பட்டாசு ஆலை உரிமையாளர் கைது
இந்த வெடிவிபத்து நடந்ததும் ஆலை உரிமையாளர் அனுசுயாதேவி, அவருடைய கணவர் வெள்ளையன் மற்றும் ஆலை மேலாளர் பாண்டி ஆகிய 3 பேர் தலைமறைவாகி விட்டனர்.
இந்த நிலையில் வெடிவிபத்து தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் ராஜாமணி அளித்த புகாரின் அடிப்படையில், அஜாக்கிரதையாக பொருட்களை கையாண்டது, உயிர்ப்பலி ஏற்படுத்தியது, உயிர்பலி ஏற்படும் என்று தெரிந்தும் அஜாக்கிரதையாக செயல்பட்டது உள்பட 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அனுசுயாதேவி நேற்று முன்தினம் இரவு விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். பின்னர் சிந்துபட்டி போலீசார் விரைந்து சென்று அனுசுயாதேவியை கைது செய்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தலைமறைவாக உள்ள அவருடைய கணவர் வெள்ளையன், ஆலை மேலாளர் பாண்டி ஆகியோரை தேடி வருகின்றனர்.
கருப்பு தினம்
பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களுக்கு, துக்கம் கடைபிடிக்கும் விதமாக, அழகுசிறை கிராமத்தில் நேற்று கருப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
பலியான கொண்டம்மாள் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்பு நேற்று அந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. ஏராளமான மக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்