கறம்பக்குடி தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
கறம்பக்குடி தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கறம்பக்குடி தாலுகா மாங்கோட்டை ஊராட்சியை சேர்ந்த நம்பன்பட்டி கிராமத்தில் சிலர் அரசு புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் அங்கு நத்தம் புறம்போக்கு இடத்தில் வசித்த ஒரு பெண்ணின் கொட்டகையை நேற்று முன்தினம் வருவாய் துறையினர் இடித்து அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நம்பன்பட்டி கிராமத்தில் புறம்போக்கு நிலத்தில் வசிப்போருக்கு பட்டா வழங்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நேற்று கறம்பக்குடி தாலுகா அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் சக்திவேல் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கவிவர்மன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி துணை தாசில்தார் பழனிவேல், போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக் ரஜினி மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து காத்திருப்பு போராட்டத்தை தற்காலிமாக கைவிடுவதாக அறிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் கறம்பக்குடி தாலுகா அலுவலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.