விஷ சாராய கொலை வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. இன்று விசாரணை தொடக்கம்

மரக்காணம் விஷ சாராய கொலை வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று விசாணையை தொடங்குகிறார்கள். இதுதொடர்பாக ஐ.ஜி. ஆலோசனை நடத்தினார்.

Update: 2023-05-18 18:45 GMT

விழுப்புரம்:

மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13-ந் தேதி இரவு மெத்தனால் கலந்த விஷசாராயத்தை குடித்ததில் இதுவரை 14 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். அதுபோல் செங்கல்பட்டு மாவட்டம் பெருங்கரணை, பேரம்பாக்கம் கிராமங்களில் விஷ சாராயம் குடித்தவர்களில் 8 பேர் இறந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 13 போ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, இந்த இரு வழக்குகளும் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. மரக்காணம் விஷ சாராய வழக்கை விசாரிக்க விசாரணை அதிகாரியாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி நியமிக்கப்பட்டார்.

சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. ஆலோசனை

இந்நிலையில் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி. நிர்மல்குமார் ஜோஷி விழுப்புரம் வருகை தந்தார். அவர் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி உள்ளிட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாரை அழைத்து கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.

அப்போது, இவ்வழக்கின் தன்மை குறித்து ஆலோசித்த ஐ.ஜி. நிர்மல்குமார் ஜோஷி, இவ்வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளதால் அதற்கேற்ப புலன் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும், பாரபட்சமின்றி நேர்மையான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும், கைது செய்யப்பட்டுள்ள நபர்களை உடனடியாக போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கும்படியும், அதுபோல் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீசாரிடம் உரிய முறையில் விசாரிக்கும்படியும், மேலும் இச்சம்பவத்தில் வேறு யார், யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது, இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார், யார் என தீவிர விசாரணை நடத்துவதோடு விசாரணை இறுதி அறிக்கையை விரைவாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.

இன்று விசாரணை

இச்சம்பவம் தொடர்பாக மரக்காணம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் ஓரிரு நாளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்கிடையே சி.பி.சி.ஐ.டி. போலீசார், இன்று (வெள்ளிக்கிழமை) தங்கள் விசாரணையை தொடங்க உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்