விஷ வண்டுகள் கடித்து சினைப்பசு, ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு
ஜெயங்கொண்டம் அருகே விஷ வண்டுகள் கடித்ததில் சினைப் பசுமாடும், ஜல்லிக்கட்டு காளையும் உயிரிழந்தது. மேலும் விஷ வண்டுகள் அதே இடத்தில் சுற்றித்திரிவதால் அப்பகுதி மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சிவா. என்ஜினீயரான இவருக்கு சொந்தமான 5 மாடுகள் அவரது வீட்டுக்குப் பின்னால் உள்ள தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தன. கடந்த 4 நாட்களுக்கு முன்பு காற்றுடன் பெய்த மழையால் அருகில் இருந்த பனை மரத்தில் கூடு கட்டி இருந்த விஷ வண்டுகள் பலத்த காற்றின் காரணமாக பறந்து கட்டி வைக்கப்பட்டிருந்த 5 மாடுகளில் 3 மாடுகளை கடித்தன. கடிபட்ட 3 மாடுகளில் ஒரு மாடு ஓடி விட்டது. கட்டி வைக்கப்பட்டிருந்த 2 மாடுகளை விஷவண்டுகள் கடித்தன. இதில் 2 மாத சினையாக இருந்த பசுமாடு நேற்று முன்தினம் செத்துப்போனது.
மேலும் விஷவண்டு கடித்து ஆபத்தான நிலையில் இருந்த ஜல்லிக்கட்டு காளைக்கு தொடர்ந்து வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் ஜல்லிக்கட்டு காளையின் நிலை கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில் 10-க்கும் மேற்பட்ட குளுக்கோஸ் பாட்டில்களும், மருந்துகளும் செலுத்தப்பட்ட நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் படுத்த நிலையிலேயே இருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை ஜல்லிக்கட்டு காளை சிகிச்சை பலனின்றி செத்தது.
அச்சத்தை உண்டாக்கி...
இதையடுத்து உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு முன்பு விளக்கு ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவிக்கப்பட்டு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செல்வராஜிக்கு சொந்தமான நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அந்த குடும்பத்தினரடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஷ வண்டுகள் கடித்ததில் செத்த சினை பசு மற்றும் ஜல்லிக்கட்டு காளையின் மதிப்பு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்ட செல்வராஜிக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜெயங்கொண்டம் தீயணைப்புத்துறையினர் மூலம் மருந்துகள் தெளித்தும், வைக்கோல் போட்டு கொளுத்தியும் அந்த விஷ வண்டுகள் சிலவற்றை மட்டுமே அழிக்கப்பட்டன. மீதமுள்ள வண்டுகள் மரத்திலேயே தொற்றிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து விஷ வண்டுகள் பறந்து கொண்டிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை உண்டாக்கி வருகிறது. எனவே அந்த மரத்தை அப்புறப்படுத்தி விஷ வண்டுகளிடமிருந்து பொதுமக்களையும், கால்நடைகளையும் பாதுகாக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.