சீறிப்பாய்ந்த காளைகளுடன் மல்லுக்கட்டிய மாடுபிடி வீரர்கள்

திண்டுக்கல் அருகே தவசிமடையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர். மாடு முட்டியதில் 21 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-02-19 19:00 GMT

ஜல்லிக்கட்டு

திண்டுக்கல்லை அடுத்த சாணார்பட்டி அருகே தவசிமடையில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நேற்று நடந்தது.

போட்டியில் பங்கேற்பதற்காக திண்டுக்கல், பழனி, நத்தம், தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, பழனி, அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 482 காளைகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டன.

456 காளைகள் அனுமதி

பதிவு செய்யப்பட்ட காளைகளை, திண்டுக்கல் கால்நடைத்துறை உதவி இயக்குனர் திருவள்ளுவன் தலைமையில் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். அதில் 456 காளைகளுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டன.

இதேபோல் மாடுபிடி வீரர்கள் 140 பேர் ஆன்லைன் மூலம் பதிவு செய்திருந்தனர். இவர்களுக்கு டாக்டர்கள் குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்தனர். வீரர்களில் 5 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

தேர்வு ெசய்யப்பட்ட 135 பேரில் ஒரு சுற்றுக்கு 25 பேர் வீதம் களம் இறங்க அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு சுற்றுக்கும் ெவவ்வேறு நிறங்களில் பனியன் வழங்கப்பட்டது.

மல்லுக்கட்டிய வீரர்கள்

ஜல்லிக்கட்டு போட்டியை காலை 8 மணிக்கு, திண்டுக்கல் ஆர்.டி.ஓ. பிரேம்குமார் கொடியசைத்து ெதாடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் சந்தனமேரி, மாவட்ட கவுன்சிலர் விஜயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வாடிவாசல் வழியாக முதலில் ஊர் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை யாரும் பிடிக்கவில்லை. இதனைத்தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப்பாய்ந்து வெளியே வந்தன. மாடுபிடி வீரர்கள் துணிச்சலுடன் காளைகளின் திமிலை பிடிக்க மல்லு கட்டினர். சிலர் காளைகளின் திமிலை பிடித்து அடக்கினர். வீரர்களை மிரட்டும் வகையில் பெரிய கொம்புகளுடன் காளைகள் களம் இறங்கின. அவற்றின் அருகே வீரர்கள் செல்லாமல் பதுங்கினர். சிலர் அந்த காளைகளை அடக்கினர்.

பந்தாடிய காளைகள்

ஆக்ரோஷமாக சென்ற காளைகளை விரட்டி பிடிக்க முயன்ற வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஆரவாரம் செய்தனர். சில காளைகள் நின்று விளையாடி, மாடுபிடி வீரர்களை நெருங்க விடாமல் ஆட்டம் காட்டி அடங்க மறுத்தது.

அதையும் மீறி நெருங்கிய வீரர்களை காளைகள் பந்தாடின. வாடிவாசலை விட்டு வேகமாக ஓடிச்சென்ற சில காளைகள், பின்னர் திரும்பி வந்து வீரர்களுடன் மல்லுக்கட்டிய காட்சியும் அரங்கேறியது.

ஒரு காளையின் கொம்பில் வீரர் அணிந்திருந்த பனியன் மாட்டிக்கொண்டது. அவர், பனியனை கழட்டி விட்டு காயமின்றி உயிர் தப்பினார். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும், சிறிது நேரம் ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டு மைதானத்தில் கொட்டப்பட்டிருந்த தென்னை நார் மீது தண்ணீர் தெளிக்கப்பட்டு சீர் செய்யப்பட்டது.

21 பேர் காயம்

காளைகள் முட்டியதில் வீரர்கள், பார்வையாளர்கள், காளை உரிமையாளர்கள் என 21 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் அசோக்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

இதில் படுகாயமடைந்த ராஜேஸ் (வயது 21) ஜோசப் (80), ஆரோக்கியசாமி (38) மதனகோபால் (36), கோகுல் (21) லயோலாஅந்தோணி (50) அரவிந்த் (16) ஆகிய 7 பேர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

வீரர்களுக்கு பரிசுகள்

ஜல்லிக்கட்டு போட்டி பகல் 2 மணிக்கு முடிவடைந்தது. போட்டியில் சிறப்பாக காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், நின்று விளையாடிய காளைகளுக்கும் எல்.இ.டி. டிவி, வெள்ளிகாசு, குக்கர், கிரைண்டர், கட்டில், மின்விசிறி, எவர்சில்வர், பித்தளை பாத்திரங்கள், பீரோ மற்றும் ரூ.10 ஆயிரம், 5 ஆயிரம், ரூ.2 ஆயிரம் ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும் ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பாக காளைகளை அடக்கிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சைக்கிள்கள் சிறப்பு பரிசாக வழங்கப்பட்டன.

ஜல்லிக்கட்டு போட்டியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைச்சாமி மேற்பார்வையில், புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு உதயகுமார், நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை தவசிமடை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்