தேவர்சோலை அருகே புலி தாக்கி காளை மாடு பலி-பொதுமக்கள் அச்சம்

தேவர்சோலை அருகே புலி தாக்கி காளை மாடு பலியானது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Update: 2023-08-24 19:30 GMT

கூடலூர்

தேவர்சோலை அருகே புலி தாக்கி காளை மாடு பலியானது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

புலி நடமாட்டம்

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை தினமும் சேதப்படுத்தி வருகிறது. இதேபோல் கால்நடைகளையும் புலி மற்றும் சிறுத்தை புலி கடித்து கொன்று வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு தேவன் பகுதியில் கால்நடைகளை புலி கடித்துக் கொன்றது.

பின்னர் வனத்துறையினர் கேமராக்களை பொருத்தி கண்காணித்து வந்தனர். ஆனால் புலி நடமாட்டம் எதுவும் கேமராக்களில் பதிவாக வில்லை. இந்த நிலையில் பேரூராட்சிக்குட்பட்ட 1- வது வார்டு மேபீல்டு எஸ்டேட்டில் வசிக்கும் ராஜூ என்பவர் தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வந்தார். நேற்று முன் தினம் காலையில் வழக்கம் போல் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார்.

மாட்டை அடித்துக் கொன்றது

பின்னர் அந்த மாடுகள் அனைத்தும் வீடு திரும்பின. ஆனால் ஒரு காளை மாடு மட்டும் வீடு திரும்ப வில்லை. இதனால் பல இடங்களில் தேடப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலையில் தேவன் எஸ்டேட் பகுதியில் புலி தாக்கி காளை மாடு பலியாகி கிடந்தது. தகவல் அறிந்த கூடலூர் வனச்சரகர் ராதாகிருஷ்ணன், மனோகர் சுரேஷ் உள்ளிட்ட வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் நேரில் வந்து இறந்து கிடந்த காளை மாட்டை பார்வையிட்டனர். இந்த மாட்டை புலி அடித்துக் கொன்றது தெரியவந்தது.

இதையடுத்து கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு காளை மாட்டின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் உறுதியளித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட ராஜூவுக்கு இழப்பீடு வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதனிடையே காளை மாட்டை புலி அடித்துக் கொன்றதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருவதோடு கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்