குழந்தை தத்தெடுப்புக்கு இனி நீதிமன்றங்களை அணுக வேண்டியதில்லை

குழந்தை தத்தெடுப்புக்கு இனி நீதிமன்றங்களை அணுக வேண்டியதில்லை என்று கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2023-08-14 19:57 GMT

இளைஞர் நீதிச்சட்டம் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு) 2015-ன் படி தத்தெடுப்பு ஆணைகள் நீதிமன்றங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் தத்தெடுப்பு முறைகளை எளிமையாக்கும் வகையில் இந்த சட்டம் திருத்தப்பட்டு இளைஞர் நீதி திருத்தச்சட்டம் 2021-ன் படி தத்தெடுப்பு வழங்கும் அதிகாரம் மாவட்ட கலெக்டருக்கு அளிக்கப்பட்டு 1.9.2022 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆகவே 1.9.2022 அன்று வரை தத்தெடுப்பு தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்தும் மாவட்ட கலெக்டரின் பரிசீலனைக்கு மாற்றப்படுகிறது. மேலும் தற்போது புதிதாக தத்தெடுக்க விரும்பும் பெற்றோர்கள் https://carings.nic.inஎன்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்து மாவட்ட கலெக்டர் மூலம் தத்தெடுப்பு ஆணை பெறலாம்.

நடவடிக்கை

மேலும் இந்த விதிகளுக்கு மாறாக இடைத்தரகர்கள் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ முறையற்ற தத்தெடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். மேலும் விவரங்களுக்குமாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தை 04142-221080 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்