சேலத்தில் பெரியார் சிலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை
பெரியார் பிறந்தநாள் விழாவையொட்டி சேலத்தில் உள்ள அவருடைய உருவ சிலைக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது தலைமையில் தி.மு.க.வினர் சமூகநீதி நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
பெரியார் சிலைக்கு மரியாதை
பெரியாரின் 145-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள அவரது உருவ சிலைக்கு சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பெரியார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அமைச்சர் முத்துசாமியும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உறுதிமொழி ஏற்பு
இதனை தொடர்ந்து சிலையின் முன்பு அமைக்கப்பட்ட மேடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதாவது, உறுதிமொழியை அமைச்சர் வாசிக்க அதனை தொடர்ந்து அங்கு திரண்டிருந்த தி.மு.க.வினர் திரும்ப வாசித்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாவட்ட அவைத்தலைவர் சுபாஷ், பொருளாளர் கார்த்திகேயன், மாநகர செயலாளர் ரகுபதி, மாநகர துணை செயலாளர்கள் கணேசன், தினகரன், மண்டலக்குழு தலைவர்கள் அசோகன், உமாராணி, தனசேகரன், பகுதி செயலாளர்கள் சாந்தமூர்த்தி, பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் வக்கீல் எஸ்.ஆர்.அண்ணாமலை, மலர்விழி ராஜா, கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் முருகன் மற்றும் நிர்வாகிகள் ரமேஷ்பாபு, செந்தில் உள்பட மாநகராட்சி கவுன்சிலர்கள், சார்பு அணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பெரியாரின் பிறந்தநாளையொட்டி அவரது உருவ சிலைக்கு மாவட்ட கலெக்டர் கார்மேகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.