குற்றாலம் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை
குற்றாலத்தில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நடத்திய சோதனையில் கெட்டுப்போன சிக்கன், மட்டன், மீன்கள் அழிக்கப்பட்டன.
குற்றாலத்தில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நடத்திய சோதனையில் கெட்டுப்போன சிக்கன், மட்டன், மீன்கள் அழிக்கப்பட்டன.
ஓட்டல்களில் சோதனை
சமீபத்தில் ஓட்டலில் சவர்மா சாப்பிட்ட ஒரு சிறுமி உயிரிழந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் உத்தரவின்படி தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் அறிவுரையின்படி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சசி தீபா மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாதசுப்பிரமணியன் ஆகியோர் குற்றாலத்தில் 5 ஓட்டல்களில் திடீர் சோதனை நடத்தினார்கள்.
அப்போது குளிர்சாதன பெட்டியில் நீண்ட நேரம் வைத்திருந்த கெட்டுப்போன சிக்கன், மட்டன், மீன் மற்றும் பிரியாணி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து அழித்தனர். மொத்தம் 80 கிலோ கெட்டுப்போன உணவு பொருட்கள் அழிக்கப்பட்டன.
நடவடிக்கை
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
அரசின் உத்தரவின் படி ஓட்டல்களில் சோதனை நடத்தி வருகிறோம். சமைத்து உடனடியாக பயன்படுத்தப்படாமல் குளிர்சாதன பெட்டியில் வைத்து மறுநாள் உபயோகம் செய்தால் அந்த பொருட்கள் கண்டிப்பாக கெட்டுப் போய்விடும். அதனை விற்பனைக்காக வைத்திருந்த உணவகங்களில் அதனை பறிமுதல் செய்து நாங்கள் அழித்தோம். இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும். மேலும் ஓட்டல்கள் நடத்துபவர்கள் உரிமங்கள் வாங்க வேண்டும். உரிய உரிமம் வாங்காத ஓட்டல்களுக்கு 'சீல்' வைக்கப்படும். கெட்டுப்போன உணவு பொருட்களை பொதுமக்களுக்கு விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.