வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிக்கு அனுமதி கேட்டு வழக்கு சிவகங்கை கலெக்டர் பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு
வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிக்கு அனுமதி கேட்டு வழக்கில் சிவகங்கை கலெக்டர் பரிசீலிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கையை சேர்ந்த தங்கராஜ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சிவகங்கை காமராஜர் காலனி கொட்டகுடி கோவில் திடலில் வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த போட்டிக்கு அனுமதி அளிக்க சிவகங்கை மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்த மனு நீதிபதிகள் சுந்தர் மற்றும் கலைமதி ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், மனுதாரரின் கோரிக்கையை சிவகங்கை மாவட்ட கலெக்டர் பரிசீலனை செய்து வருகிற 11-ந் தேதிக்குள் உரிய முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.