அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீட்டிப்பு -ஐகோர்ட்டு உத்தரவு

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-12-15 18:44 GMT

சென்னை,

தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 2001-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் 2006-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இந்த வழக்கின் அடிப்படையில், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடுப்பு சட்டத்தின் கீழ் கடந்த 2020-ம் ஆண்டு மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்,

சொத்து முடக்கம்

இந்த வழக்கு விசாரணையில், அனிதா ராதாகிருஷ்ணன் 2 கோடியே 7 லட்சத்து 96 ஆயிரத்து 384 ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்காக அவரது சொத்துகள் முடக்கப்பட்டது.

இதையடுத்து தன் மீதான வழக்கையும், சொத்துகளை முடக்கிய உத்தரவையும் ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

தடை நீட்டிப்பு

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அமலாக்கத்துறை சார்பில் வக்கீல் என்.ரமேஷ், அனிதா ராதாகிருஷ்ணன் சார்பில் மூத்த வக்கீல் சித்தார்த் அகர்வால் ஆகியோர் வாதிட்டனர்.

இதையடுத்து, அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 30-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்