திருவாலங்காடு அருகே கோர்ட்டு உத்தரவின்படி நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம் - குடியிருப்பு வாசிகள் எதிர்ப்பு; போலீஸ் குவிப்பு
திருவாலங்காடு அருகே கோர்ட்டு உத்தரவின்படி நீர்நிலை ஆக்கிரமிப்பு கட்டிடங்களை வருவாய்துறையினர் இடித்து அகற்றினர்.;
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுக்கா, திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது தொழுதாவூர் ஊராட்சி. இந்த பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கு எதிரே குட்டை ஒன்று உள்ளது. இந்த குட்டையின் அருகே உள்ள இடத்தை அதே கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வி, அருணோதயா, அருள்முருகன் உள்பட 7 பேர் ஆக்கிரமித்து 8 வீடுகள், ஒரு கடை உள்பட 9 கட்டிடங்களை கட்டி இருந்தனர்.
இந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற வேண்டும் என அதே கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2019-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து கடந்த செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் திருத்தணி வருவாய்த்துறையினர் இரு முறை ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நோட்டீஸ் அளித்தனர்.
இதை எதிர்த்து அருள்முருகன், ஷம்ஷத் பேகம் உள்பட 4 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று திருத்தணி ஆர்.டி.ஓ. அசரத்பேகம், தாசில்தார் வெண்ணிலா ஆகியோர் தலைமையில் வருவாய் துறையினர் 3 பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றினர்.
இதற்கு குடியிருப்பு வாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் இங்கு வசித்து வருகிறோம். எங்களால் குட்டைக்கு எந்த பாதிப்பும் இல்லை. திடீரென வீடுகளை இடித்ததால் எங்கு செல்வது, என அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.
இங்கு ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டு இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அபூர்வாவின் தாயார் வசித்து வந்த வீடு, தொழுதாவூர் பஞ்சாயத்து தலைவர் அருள் முருகனின் வீடு, ரேஷன் கடை, ஊராட்சி மன்ற அலுவலகம், இ-சேவை கட்டிடம் உள்ளிட்டவைகளும் அகற்றப்பட்டது.
ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்க திருத்தணி போலீஸ் துணை சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.