பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட் அனுமதி

அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதியளித்து ஆலந்தூர் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.;

Update:2023-10-30 16:37 IST

சென்னை,

பாஜக கொடிக்கம்பத்தை அகற்றும் போது, மாநகராட்சியின் ஜே.சி.பி. இயந்திரத்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பா.ஜ.க. நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மற்றும் பாஜக-வை சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில், அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 4 பேரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக்கோரி போலீசார் தரப்பில் ஆலந்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோரை ஐந்து நாட்கள் விசாரிக்க அனுமதியளிக்க வேண்டும் என தமிழக காவல் துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக தரப்பு வழக்கறிஞர், அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது என வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களுக்குப் பின், அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தமிழக காவல் துறைக்கு அனுமதியளித்து ஆலந்தூர் மாஜிஸ்திரேட் சந்திரபிரபா உத்தரவிட்டார்.

முன்னதாக, அமர் பிரசாத் ரெட்டிக்கு மூச்சு திணறல் பிரச்சினையும், ரத்த கொதிப்பும் இருப்பதால் அவருக்கு சரியான நேரத்தில் மாத்திரைகளும், உடைகள் மாற்ற அனுமதியும் வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று, அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

 

Tags:    

மேலும் செய்திகள்