தமிழக அரசின் தலைமை குற்றவியல் வக்கீலுக்கு மதுரை ஐகோர்ட்டு பாராட்டு

தமிழக அரசின் தலைமை குற்றவியல் வக்கீலுக்கு மதுரை ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்தது.

Update: 2022-08-22 18:56 GMT


மாவட்ட கோர்ட்டுகளில் குற்ற வழக்குகளில் நியமிக்கப்பட்டு உள்ள சிறப்பு அரசு குற்றவியல் வக்கீல்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழக்குகளை முறையாக கையாள்வதில்லை. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று சாகுல் அமீது என்பவர் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை நீதிபதி சிவஞானம் விசாரித்து பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 24 (8)-ன் படி சிறப்பு அரசு குற்றவியல் வக்கீல்கள் நியமனம் சம்பந்தமாக தெளிவான விதிகளை வகுத்து செயல்படுத்தவும், அரசு குற்றவியல் வக்கீல்களின் பணியை ஆய்வு செய்வது அவசியம்.

சமீபத்தில் சிறப்பு சட்ட வழக்குகளில் அரசு சிறப்பு வக்கீல்கள் குற்ற வழக்குகளை சீரிய முறையில் நடத்த உரிய வழிமுறைகளையும் அறிவுரைகளையும், மாநில அரசு தலைமைக் குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா வழங்கி உள்ளார். அவருடைய இந்த முயற்சி பாராட்டுக்குரியது.

குற்ற வழக்குகளை சீரிய முறையில் நடத்த மாவட்ட கோர்ட்டுகளில் பணிபுரியும் மற்ற அரசு குற்றவியல் வக்கீல்களுக்கும் இத்தகைய வழிமுறைகளையும், அறிவுரைகளையும் வழங்குவது குறித்து மாநில அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லலாம்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் சிறப்பு அரசு குற்றவியல் வக்கீல்கள் நியமிக்கப்பட்டு உள்ளனரா என்பதை மாநில அரசு கருத்தில் கொள்ள வேண்டும். குற்றவியல் வழக்குகளில் நீதி கிடைக்க மாநில அரசு கணிசமான தொகையை செலவிடுகிறது. அவ்வாறு இருக்கும்போது திறமையான வக்கீல்களை அரசு குற்றவியல் வக்கீல்களாக நியமனம் செய்வது அவசியம். மேலும், மாவட்ட கோர்ட்டுகளில் அரசு சிறப்பு வக்கீல்களை நியமிக்க விதிகளை இயற்றுவதும் மற்றும் அவர்களது பணிகளை ஆய்வு செய்வதும் முக்கியமானதாகிறது.

எனவே இந்த வழக்கில் உரிய பதில் அளிக்க தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், அரசு குற்றவியல் தொடர்பு இயக்குனர் ஆகியோர் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்படுகிறார்கள். இந்த வழக்கு வருகிற 1-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்