ஓய்வுபெற்ற போலீஸ் துணை சூப்பிரண்டு உள்பட 4 பேருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு

வெளிநாடு சுற்றுலா அழைத்துச்செல்வதாக கூறி அலைக்கழித்ததற்காக ஓய்வு பெற்ற போலீஸ் துணை சூப்பிரண்டு உள்பட 4 பேருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கும்படி தனியார் சுற்றுலா ஏஜென்சிக்கு மதுரை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

Update: 2022-07-24 17:57 GMT


வெளிநாடு சுற்றுலா அழைத்துச்செல்வதாக கூறி அலைக்கழித்ததற்காக ஓய்வு பெற்ற போலீஸ் துணை சூப்பிரண்டு உள்பட 4 பேருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கும்படி தனியார் சுற்றுலா ஏஜென்சிக்கு மதுரை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

வெளிநாடு சுற்றுலா

மதுரையை சேர்ந்த டாக்டர் ஜீவராஜன். இவரது மனைவி மனோன்மணி. இவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இதேபோல ஓய்வு பெற்ற போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாங்கம். இவரது மனைவி டாக்டர் நாகம்மாள். இவர்கள் 4 பேரும் மதுரை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருந்ததாவது:-

கடந்த 2013-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்கா, கென்யா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தோம். அதன்படி, சுற்றுலா ஏஜென்சியை அணுகி, வெளிநாடு சுற்றுலா செல்வதற்கான தங்களின் திட்டத்தை தெரிவித்தோம். இதையடுத்து விசா, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக தனியார் ஏஜென்சி தெரிவித்தது. இதையடுத்து நாங்கள் 4 பேரும் தனித்தனியாக தலா ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்தை ஏஜென்சியிடம் செலுத்தினோம்.

அலைக்கழிப்பு

இந்தநிலையில் திட்டமிட்டபடி எங்களை மதுரையில் இருந்து மும்பைக்கு ஏஜென்சி அழைத்து சென்றது. மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்க வைத்தனர். ஓரிரு நாட்கள் கழித்து, நாங்கள் வெளிநாடு செல்வதற்கான சுற்றுலா விசா கிடைக்கவில்லை என்று கூறி, 4 பேரையும் மீண்டும் மதுரைக்கு அனுப்பி வைத்துவிட்டனர். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளானோம். வெளிநாடு சுற்றுலா அழைத்துச்செல்வதாக கூறி அலைக்கழித்த நிறுவனம் நாங்கள் செலுத்திய தொகையை திருப்பி செலுத்தவும், உரிய இழப்பீட்டை வழங்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.

ரூ.2 லட்சம் இழப்பீடு

இந்த வழக்குகளை மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு தலைவர் பாரி, உறுப்பினர்கள் விமலா, வேலுமணி ஆகியோர் விசாரித்தனர். முடிவில், மனுதாரர்களை வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச்செல்வதாக கூறி தனியார் ஏஜென்சி அலைக்கழித்து உள்ளது.

எனவே மனுதாரர்கள் செலுத்திய தொகையையும், அவர்களுக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்காக தலா ரூ.2 லட்சத்தை இழப்பீடாகவும் தனியார் ஏஜென்சி நிறுவனம் 3 மாதத்தில் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்